Thursday 8 August 2019

இன வேறுபாடா...?

வெளிநாட்டுத் தொழிலாலர்களை வருவிப்பதில் இன வேறுபாடு காட்டப்படுகின்றதா என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது! 

இந்தியர்களின் தொழில், சீனர்களின் தொழில், மலாய்க்காரர்களின் தொழில் என்று பிரித்துப் பார்க்கப்படுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

யாரும் இதனைக் குறை சொல்ல முடியாது.  நாம் எல்லாவற்றையும் அப்படித்தான் பிரித்துப் பிரித்து பழகியிருக்கிறோம்! இந்தியர்கள் என்றால் ஒரு மாதிரி, சீனர்கள் என்றால் ஒரு மாதிரி, மலாய்க்காரர்கள் என்றால் ஒரு மாதிரி - இப்படித்தான் அரசாங்கம் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது. நாமும் அதனையே பின்பற்றி எதனை எடுத்தாலும் பிரித்துப் பழகி விட்டோம்!   அதுவும் முந்தைய டாக்டர் மகாதிர் ஆட்சி காலத்தில் இப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது  அதிகமாக வழக்கத்திற்கு வந்து விட்டது!

நெல் பயிரிடும் தொழிலுக்கும்,  கையுறை  தயாரிப்புத் தொழிலுக்கும்  வெளி நாட்டுத் தொழிலாளர்களை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  உள்துறை அமைச்சும்,  மனிதவள அமைச்சும் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.  அந்த இரு தொழில்களுக்கும் வங்காளதேசிகளும், நேப்பாளிகளும் தருவிக்கப்படுவர்.

நாம் இங்கு பார்ப்பது என்னவெனில் நெல் பயிரிடும் தொழில் என்பது  காலங்காலமாக மலாய்க்காரர்கள் செய்கின்ற தொழில். அதே போல கையுறை தொழிற்சாலை என்பது  சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தொழில்.  கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது மலாய்க்காரர் தொழிலுக்கு ஆதரவு, சீனர்களின் தொழிலுக்கு ஆதரவு, இந்தியர்களின் தொழிலுக்கு ஆதரவு இல்லை என்று அரசாங்கத் தரப்பு செயல் படுகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது! 

இப்படி நினைப்பதே தவறு தான்! என்ன செய்வது?  பழக்க தோஷம்! இன்னொரு நினைப்பும் உண்டு. சலவைத் தொழிலாக இருந்தாலும் சரி, ஜவுளி தொழிலாக இருந்தாலும் சரி உள்ளூரில் ஆளே இல்லையா என்று கேள்வி எழுகிறது! எத்தனையோ பெண்கள் வேலைக்காக அலைகிறார்கள்.  திருப்திகரமான  சம்பளம் அவர்களுக்குக் கொடுத்தால்  ஆள் கிடைப்பதில் என்ன பிரச்சனை?  முடி திருத்தும் தொழில் என்பது சீனர்கள் இந்தியர்களை விட இன்னும் நவீன முறையில் செய்கிறார்கள். அவர்களுக்குப் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை!   தங்க நகை என்பது ஒரு நுட்பமான தொழில் தான். இல்லை என்று சொல்லவில்லை.  பெரும்பாலும் இது குடும்பத் தொழிலாகவே பார்க்கப்படுகின்றது. இது மிகவும் உயரிய தொழில்.  அதற்கு உரிய வருமானம் இல்லாமல்  யாரும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள்!  எல்லாவற்றுக்கும் வருமானமே பிரதானம்.  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்றால்  குறைந்த சம்பளம் அதிக வருமானம் என்கிற மனப்பான்மை நீங்க வேண்டும். 

ஓர் வெளி பார்வையாளனாகவே நான் இதனைப் பார்க்கிறேன். மற்றபடி உள்ளே உள்ள பிரச்சனைகள்  எனக்குத் தெரிய வாய்ப்பில்லை!

இது இன வேறுபாடா? உங்களைப் போலவே எனக்கும் தெரியாது!

No comments:

Post a Comment