Monday 5 August 2019

எட்டாவது எட்டுமா...!

நாளிதழில்  படித்த ஒரு செய்தி எனக்குள்ளேயே ஒரு புன்னகையை ஏற்படுத்தியது!

ஆமாம்,  நாட்டின் எட்டாவது பிரதமராக  கெடிலான் கட்சியின் தேசியத் தலைவர்  அன்வார் இப்ராகிம் வருவதற்கு 198 தொகுதித் தலைவர்கள் ஆதரவு கொடுத்திருப்பதாக  அந்தச் செய்தி கூறூகிறது. 

உடனே என் மூளை அந்த எட்டாவது எண் என்னன்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாக எப்போதோ படித்த சில செய்திகள் ஞாபகத்திற்கு வந்தன.

எட்டாவது எண்ணின் பலன் என்பது: நல்லது செய்தால் ஒரே தூக்காகத் தூக்கும், கெடுதல் செய்தால் படு பாதாளத்திற்குத் தள்ளிவிடும் என்பதாக படித்த ஞாபகம் உண்டு. 

சில உதாரணங்களைக் கொடுத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. எட்டாம் எண்ணில் பிறந்தவர்.  அவர் உயிரோடு இருந்த வரை அவரை அசைக்க ஆளில்லை.  அவர் பார்க்காத உச்சம் இல்லை. வாழ்நாள் முழுவதும் போராட்டங்கள், போர்க்களங்கள் என்று போராடிக் கொண்டே இருந்தவர்.  அவர் யாரையும் நிம்மதியாக விடவில்லை. ஆனாலும் அவர் நிம்மதியாகத் தான் இருந்தார்!  கடைசி வரையில் அவர் கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார்.   வீழ்ச்சி என்பது அவருக்கு இல்லை!           

இன்னொரு பக்கம் இங்கிலாந்தின் எழுத்தாளர் அறிஞர் பெர்னாட்ஷா.  இவரும் எட்டாம் எண்ணில் பிறந்தவர் தான். பின் நாள்களில் அவரை அறிஞர் என்று கொண்டாடினாலும் அவருடைய ஆரம்ப காலம் படு மோசமாகத்தான் இருந்த்து. படாதா பாடுப்பட்டுத் தான் அவருடைய முன்னேற்றம் அமைந்தது.  முன்னேறி வரும் போது பல இடையூறுகள். எல்லாத் தடைகளையும் தாண்டி வந்தவர். அவர் தன்னுடைய கொள்கைகளை எந்தக் காலத்திலும் மாற்றிக் கொண்டதில்லை. இங்கிலாந்து மக்கள் தான் அவருக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்!  பிறப்பு தரித்திரம் தான். இறப்பு சரித்திரம்!

நமது தானைத் தலைவர் துன் சாமிவேலுவும் எட்டாம் எண்ணில் பிறந்தவர் தான்.  மலேசிய இந்திய அரசியலில் அவருடைய உச்சத்தை யாரும் தொட்டதில்லை. இனி மேலும் தொட வாய்ப்பில்லை. நீண்ட காலம் பதவியில் இருந்தவர்.  அவர் பதவியில் இருந்த காலத்தில் ஒரு நாளேனும் அவர் நிம்மதியாக இருந்திருப்பாரா என்பதே சந்தேகம்! எப்போது எதிரிகள் தன்னை வீழ்த்துவார்கள் என்கிற பயம். யார் மேலும் நம்பிக்கையில்லை. யாரை நம்புவது?  எவன் காலை வாருவான் என்பது தெரியவில்லை!   எட்டாம் எண் அவருக்கு உச்சத்தைக் கொடுத்தது.  அதே சமயத்தில்அவரை ஆட்டிப் படைத்தது!  பதவி போனதும் ....இன்றைய நிலைமை - மறந்து போனோம்! 

இப்போது  எட்டாவது பிரதமர் என்று எதிர்பார்க்கப்படும் அன்வாரைப் பற்றி பார்ப்போம். இவரே அடுத்த பிரதமர் என்பதாக  தேர்தலின் போது ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்று.   ஆனால் அவரை இப்படியும் அப்படியுமாக அலைக்கழிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். ஒரு பக்கம் அவர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு.  யாரை நம்புவது என்று அவருக்கே புரியவில்லை! கூட இருப்பவனே குழி பறிக்கிறான்! பிரதமர் மகாதீரை எந்த அளவுக்கு நம்பலாம் என்றும் தெரியவில்லை! நல்லவராகவும் தெரியவில்லை. கெட்டவராகவும் தெரியவில்லை!

பாவம் அன்வார்! அவர் பிரதமர் பதவியில் அமரும் வரை அவருக்கு நிம்மதி இல்லை!  உண்மையில் இந்த எட்டாவது அவரைப் படாதப்பாடு படுத்துகிறது!  பிரதமர் பதவி கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் எட்டாத தூரத்தில் இருப்பது போல் தெரிகிறது!  வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கிறது!

ஒன்றை நாம் உறுதியாக நம்பலாம். அன்வார் பிரதமராக வந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. அவர் நல்லது செய்வார். நல்ல பிரதமராக இருப்பார். உச்சம் தொடுவார் என நம்பலாம்!

எட்டாவது எட்டும் என நம்புவோம்!

No comments:

Post a Comment