Monday 12 August 2019

இதன் பின்னணி மகாதிரோ...!

நாட்டில் நடைபெறுகின்ற ஒரு சில விஷயங்களைப் பாக்கும் போது இதன் பின்னாலிருந்து இயக்குபவர் டாக்டர் மகாதிரோ என்று எண்ண வேண்டியுள்ளது! 

எடுத்துகாட்டுக்கு ஜாகிர் நாயக்கைப் பற்றி சொல்லலாம்.  மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமரை விட இந்திய பிரதமர் மோடியை அதிக விரும்புகின்றனர் என்று ஜாகிர் நாயக் சொல்லுகிறார்.   அந்த அளவுக்கு அவர் பேச யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தார்?  நாட்டில் தஞ்சம் புகுந்த ஒருவர் இப்படி பேச முடியுமா என்று நாமும் அதிசயிக்கிறோம்! 

இதன் பின்னணியில் பிரதமர் மகாதிர் தான் இருப்பார் என நாம் நினைக்க வேண்டியுள்ளது.  மகாதீரின் அனுமதி இல்லாமல் தஞ்சம் புகுந்த ஒருவர் இப்படி பேச வாய்ப்பில்லை.  அப்படி என்றால் பிரதமர் மகாதிர் இந்த நாட்டு இந்தியர்களைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்? அல்லது இந்துக்களைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்? பாரிசான் காலத்திலும் அவர் இந்தியர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போதும், இதுவரை, எதுவும் செய்யவில்லை.  உதாரணத்திற்குக் குடியுரிமை பிரச்சனையில் ஒரு கல்லைக் கூட அவர் எடுத்து வைக்கவிலை!  அவர் ஒன்றுமே செய்யாமல் இங்குள்ள இந்துக்களைப்பற்றி - இன்னொரு நாட்டிலிருந்து தஞ்சம் புகுந்தவர் மூலம் - தனது  கருத்துக்களை வெளியிடுகிறார் என்று ஆணித்தரமாக நான் நம்புகிறேன்.

இன்னொன்று அரபு சித்திரக்கலை எழுத்து.  முதலில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பியவர் கல்வி அமைச்சர் மஸ்லி. கொஞ்சம் கூட நமக்குச் சம்பந்தமிலாத ஒரு எழுத்து முறையைப் பற்றி முதலில் பேசியவர் மஸ்லி  தான். அதன் பின்னர் தான் பிரதமர் மகாதிர் ஒன்றும் தெரியாதவர் போல் உள்ளே நுழைந்தார்!  ஆனால் இதன் பின்னணி பிரதமர் தான்.  அதில் சந்தேகமில்லை. ஒரு காலக்கட்டத்தில் அம்னோ செய்ய முடியாததை இப்போது  பக்காத்தான் மூலம் செய்ய முனைகிறார்!  இதன் மூலம் பிரதமர் மகாதிர் என்ன செய்ய முயலுகிறார்?  ஒன்று மலாய்க்காரர்களின் ஆதரவு. இன்னொன்று அரசியல் ரீதியாக சீனர்களை வீழ்ச்சியடைய செய்வது.

ஒரு சில விஷயங்களை மற்றவர்களைச் சொல்ல வைத்து  பின்னர் அவர் உள்ளே வருகிறார்.  முன்னாள் பிரதமராக இருந்த போது என்ன செய்தாரோ அதையே இப்போதும் செய்கிறார்!  அப்போது அவரைச் சர்வாதிகாரி என்றோம். இப்போதும் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது!  எல்லா அதிகாரமும் பிரதமரிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  இப்போது இவர் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் நம்மை ஐயுற வைக்கின்றன. 

நல்லது நடக்கும் போது நாம் கை தட்டுகிறோம். கெடுதல் நடந்தால் அதன் பின்னணி பிரதமர் மகாதிர் என்கிறோம்! அது தானே உண்மை!

No comments:

Post a Comment