மின்னல் எப்.எம். வானொலி நல்லதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!
பொதுவாக நான் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதில்லை. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் கேட்டிருக்கிறேனே தவிர சமீப காலமாக இல்லை!
மின்னல் எப்.எம். இப்போது புதிதாக ஒரு நிகழ்ச்சியை அறிவிப்பு செய்திருக்கிறது. ஆமாம்! இந்திய இளைஞர்கள் வியாபாராத் துறையில் பீடுபாடு கொள்ள ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க விருக்கிறது என்பது நல்ல செய்தி என்பதில் ஐயமில்லை.
மலேசிய வானொலி இது போன்ற நிகழ்ச்சியை ஒலிபரப்புவது இது தான் முதல் முறை என்று சொல்லுவதற்கில்லை. இதெல்லாம் எத்தனையோ ஆண்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இது ஒரு தொடர் முயற்சி. இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதின் மூலம் ஏதேனும் பயன் உண்டா என்று கேள்விகள் எழுந்தாலும் இதனால் பயன் உண்டு என்பதே நமது முடிவு.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நகர வேண்டுமென்றால் அடி மேல் அடி அடிக்கத்தான் வேண்டும்! மலாய் சமூகத்தினர் இப்போது வணிகத்தில் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர் என்பது நமக்குத் தெரிந்து தான் இருக்கிறது. காரணம் அரசாங்கம் எடுத்த இடைவிடா முயற்சிகள் தான். ஏன், சும்மா கிடந்தவனைக் கூட வலிய பணம் கொடுத்து வியாபாரம் செய்ய வைத்தார்கள். சில தோல்விகள் என்றாலும் பல வெற்றிகள்!
நமக்குப் பணம் கொடுக்க ஆளில்லை. அதனால் நமது சொந்தப் பணம் தான் நமது முதலீடு. வியாபாராம் என்பது நமது பணத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். நமது பணம் என்றால் தான் நாம் செய்கின்ற வியாபாராத்தின் மீது நமது அக்கறை இருக்கும்!
இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு நல்ல பல செய்திகள் கிடைக்கும். நேர்காணலின் போது வர்த்தர்களின் அனுபவம் என்பது முக்கியம். வியாபாரம் என்பது எடுத்த எடுப்பில் வெற்றி அடைவது அல்ல. அது வெற்றியும் அல்ல. எல்லாமே மேடு பள்ளம் நிறந்தவைகள் தான். அனுபவம் தான் நமக்குப் பாடம். நாம் ஒவ்வொன்றையும் அனுபவித்துக் கற்றுக் கொள்ளுவதை விட பிறரின் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளுவது எளிது.
பிற வர்த்தகர்களின் அனுபவ பகிர்வுகள் நமக்கு நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுக்கும். வர்த்தகம் என்பது நமக்குப் புதிதல்ல. நாமே ஒரு வர்த்தகச் சமூகம் தான். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட சில சரித்திர நிகழ்வுகளால் வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது.
அதனாலென்ன? வர்த்தகத்தில் நம்மை தூக்கி நிறுத்த பற்பல முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அது போல மின்னல் வானொலியும் தனது பணியைச் செய்கிறது. நாம் பயன் பெற வேண்டும்.
நாம் வர்த்தக சமுதாயம்! அதனை மறக்க வேண்டாம்! மீண்டும் வர்த்தகத்தில் தலை நிமிர்வோம்
No comments:
Post a Comment