Monday 19 August 2019

என்ன கெடு இது..?

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக் நமது மலேசிய மண்ணின் மைந்தர்கள் நால்வருக்கு 48 மணி நேர கெடு கொடுத்திருக்கிறார்! எதற்கு? அவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!  கேட்காவிட்டால்? வழக்குத் தொடரப் போகிறாராம்!

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லெஸ் சந்தியாகோ,  சட்டமன்ற உறுப்பினர் சதிஷ் முனியாண்டி,  முன்னாள் தூதர் டெனிஷ் ஜே இக்னேஷியஸ் - இவர்கள் நால்வரும்  அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்! மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடர்வதோடு அவர்களிடமிருந்து கணிசமான இழப்பீட்டை அவர்களிடமிருந்து கறக்க வேண்டுமாம்!

ஒரு பக்கம் மலேசிய இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கிறார், ஜாகிர் நாயக்! தனது சமயச் சொற்பொழிவுகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டன என்கிறார். இன்னொரு பக்கம் வழக்குத் தொடருவேன் என பய முறுத்துகிறார்!  யார் யாரைப்  பயமுறுத்துவது என்கிற விவஸ்த்தையே நாட்டில் இல்லையோ என்று நினைக்க வேண்டியுள்ளது!

அதிலும் நாட்டில் தஞ்சம் புகுந்தவர்.அவருக்கு ஏகப்பட்ட மனிதர்களின் ஆதரவு இருப்பதாக நினைத்துக் கொண்டு இங்குள்ள இந்தியர்களிடம் சவால் விடுகிறார்! 

இப்போது எதற்காக இந்த வழக்கை ஜாகிர் நாயக் கொண்டு வருகிறார்?

வழக்கை விட, வழக்கின் மூலம் ஏதாவது பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் அவரது குறிக்கோள்! ஆமாம்! ஜாகிர் நாயக் எங்குச் சென்றாலும் பணம் தான் அவரது முதன்மையான நோக்கம்!

பண மோசடி வழக்கு, தீவிராதத் தூண்டுதல் - இதற்காகத்தான் அவர் இந்தியாவால் தேடப்பட்டு வருகிறார்.  

அவர் என்று மேடையில் பேச ஆரம்பித்தாரோ அன்றிலிருந்தே தனது அழிவுச் சொற்பொழிவுகள் மூலம் நாட்டில் விஷக் கருத்துக்களைத் தூவி வருகிறார். அங்கும் கூட அவருக்கென்று சில ஆதரவாளர்கள்.  அவர்கள் இந்தியர்கள் அல்ல! அது தான் அவருக்குக் கொஞ்சம் தலை நிமிரவும். துணிவாகப் பேசவும் தைரியம் கொடுத்து விட்டது!

இப்போது, இந்த நால்வரும், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்! அத்தோடு அவருக்கு இழப்பீடும் கொடுக்க வேண்டுமாம்!

கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள்! இவர் இப்படி கெடு வைப்பதால் தனக்குத் தானே கேடு வைத்துக் கொள்ளுகிறார்!

No comments:

Post a Comment