ஏனோ தெரியவில்லை ஒரு சில தினங்களாக சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்ச மதமாற்று மசோதாவைப் பற்றியான செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன!
நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! ஆளுக்கு ஆள் இது பற்றிப் பேசி கருத்து தெரிவிப்பதை விட சட்டம் என்ன சொல்லுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
பொதுவாக, நாம் சொல்லுவதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்னும் எண்ணம் யாருக்கும் நல்லதைக் கொண்டு வரப்போவதில்லை. அது வீட்டுக்கும் பொருந்தாது, நாட்டுக்கும் பொருந்தாது! ஆனால் அதைத் தான் ஒரு சிலர் செய்கிறார்கள்.
நம் கண் முன்னே ஒரு சட்டம் இருக்கிறது. நீதிபதிகள் அது தான் எல்லை என்பதாக வகுத்து வைத்திருக்கிறார்கள். அதன் பின்னரும் மீண்டும் மீண்டும் "நான் அங்கேயே தான் இருப்பேன்! அதை விட்டு நகரமாட்டேன்! நான் தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும், நீதிமன்றம் அல்ல!" என்று கூறிக் கொண்டு இருந்தால் இதற்கு ஒரு முடிவு காண முடியாது.
நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனையைத் தான் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கிறோம். அதன் பின்னர் நாம் நீதிமன்றத்துக்குத் தான் கட்டுப்பட வேண்டும். நீதிமன்றம் ஒரு முடிவு எடுத்த பின்னரும் எதிர்கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு ஒரு முடிவே இல்லை! அப்படி ஒரு நிலைமை ஏற்படக் கூடாது. பாதிக்கப்படுபவர்களுக்கு நீத்மன்றமே புகலிடம். அதற்கு மேல் எதுவுமில்லை.
பாலர்பள்ளி ஆசிரியை இந்திராகாந்தி வழக்கில் கடந்தாண்டு கூட்டரசு நீதிமன்றம் அவரது மூன்று பிள்ளைகளை அவரது முன்னாள் கணவர் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியது செல்லாது என்று அறிவித்துவிட்டது. தாய், தந்தை இருவரில் ஒருவர் மற்றவரின் அனுமதியில்லாமல் பிள்ளைகளை மதம் மாற்றினால் அது சட்ட விரோதம் என்பதாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் உச்ச நீதிமன்றமே இதனை சட்ட விரோதம் என்று அறிவித்து விட்ட நிலையில் இப்போது சிலாங்கூர் அரசாங்கம் ஒரு சட்ட திருத்தத்தின் மூலம் "இருவரில் ஒருவர் அனுமதித்தால் போதும்" என்று கொண்டு வர முயற்சி செய்வது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மதம் மாறுவது என்பது வேறு. மதமாற்றம் செய்வது என்பது வேறு. நம் கண் முன்னே இருக்கிற சட்டத்தைப் பின்பற்றாமல் காலாகாலமும் நாம் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டத்தையும் பின்பற்றாமல் இருப்பது ஏற்கக் கூடியது அல்ல.
மாற்றம் தான் வேண்டும்!
No comments:
Post a Comment