பொதுவாக இந்த அழகிப் போட்டிகளைப் பற்றியெல்லாம் நான் எந்த காலத்திலும் கவலைப்பட்டதில்லை!
ஒரு வேளை அது பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் விளையாட்டு என்கிற எண்ணத்தினாலாக இருக்கலாம்! ஆனால் உண்மையில் அது அப்படி ஆல்ல. நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த இளம் பெண்களுக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள இந்த அழகிப் போட்டிகள் ஓர் ஏணியாக விளங்குகின்றன..
ஆனால் அதுவும் காரணம் அல்ல! இப்போது இங்கு நாம் இரண்டாவதாக அழகிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி பேசுவது சாதாரணமாக அது நடைமுறையல்ல!
ஒரே காரணம் தான். மான்யா சிங் ஓர் ஏழைப் பெண். ஒரு ரிக்ஷாகாரரின் மகள். இந்த காரணத்தினால் தான் அவர் முக்கியத்துவம் பெறுகிறார்.
மான்யா சிங் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தில் நிரந்தர வறுமை. வறுமையைச் சந்திக்காத நாளில்லை. ரிக்ஷாவில் போனால் பணம் செலவாகுமே என்பதற்காக நடந்தே போய் பணத்தை மிச்சம் படித்திருக்கிறார்.
பள்ளிக்குப் போனதில்லை. இளம் வயதிலேயே வேலை! வேலை! வேறு வழியில்லை. அப்பாவின் வருமானம் போதாது. அவருக்கு உதவ வேண்டும். குடும்ப வறுமை. பட்டினி கிடந்த நாள்கள் ஏராளம். பல இரவுகள் தூங்கவில்லை.அணிந்த உடைகளோ மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டவை. படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வியைத் தொடர்கிறார். புத்தகங்கள் வாங்க பணம் இல்லை. காலை வேளையில் கல்லூரி. மாலை வேளைகளில் வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் பெண். இரவு நேரங்களில் "Call Centre" -ல் வேலை. அப்புறம் ஒப்பனைத் துறையில் ஈடுபாடு. அந்த துறையின் ஈடுபாடு தான் பின்னர் அழகிப் போட்டியில் வந்திறக்கியது. தனது பட்டப்படிப்பை முடிக்கும் தருவாயில் பரிட்சைக்குக் கட்ட பணமில்லை. அம்மாவிடம் இருந்த ஏதோ மிச்சம் மீதி இருந்த நகைகளை அடகு வைத்து ஒரு வகையாகக் கட்ட முடிந்தது. எல்லாமே போராட்டம்!
கல்லூரியில் ஏளனப் பார்வை ரிக்ஷா ஒட்டுனரின் மகள் என்பதால். புறக்கணிப்பு அழகு இல்லை என்பதால், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்பதால். கல்லூரியில் நடக்கும் அழகி போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அழகு இல்லை என்பதால்!
ஆனால் இந்த போராட்டங்கள் எல்லாம் அவரை வீழ்த்தவில்லை. வீழ்வேன் என்று நினைத்தாயோ! வீழ மாட்டேன்! என்று சபதம் எடுத்துக் கொண்டதால் தான் இன்று அவரைப் பற்றி உலகெங்கிலும் பக்கம் பக்கமாக எழுதப்படுகின்றது!
இப்போது வெற்றியின் முதல் படியில் கால் எடுத்து வைத்திருக்கிறார். இனி வரப்போகிற வெற்றிகளுக்காக அவரை வாழ்த்துவோம்!
வாழ்க்கையில் இன்னும் பலர் அனுதினமும் போராடித்தான் வருகின்றனர். அவர்களுக்கு அவர் சொல்லுகின்ற செய்தி என்ன?
"போராடத் தயங்காதீர்கள்! போராட்டத்தை விட்டு விடாதீர்கள்! நீங்க எதை சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை நோக்கி அனுதினமும் நகருங்கள்!"
"கல்வி என்பது வலிமையான ஆயுதம். எந்தக் காலத்திலும் அது உங்களை விட்டுப் பிரியாது. கல்வி மூலம் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்."
அது சரி! பள்ளிக்கூடமே போகாத இவர் நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். இன்னும் கல்வியைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment