Tuesday 23 February 2021

ஏன் இந்த புனைவுகள்?

 சமீப காலமாக,  தமிழ்ப்பள்ளி பாடப் புத்தகத்தில் பெரியார் ஈ.வே.ரா. இந்து சமயத்தைக் கேவலப்படுத்தும் விதமாக  இரண்டு படங்கள் இடம் பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் தீவிரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இல்லாத ஒரு செய்தியை இருப்பது போல காட்டுவதில்  வலைதளங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பது உண்மையிலும் உண்மை!

இந்த செய்தியின் மூலம் என்ன, எங்கிருந்து இந்த செய்தி வெளியாகின்றது என்று கண்டுபிடிப்பதில் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல.

எனக்குத் தெரிந்த வரை இந்த செய்தியை முதன் முதலாக நாளிதழ்களில் கொண்டு வந்தவர்  மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான்.  அவர் இந்த செய்தியை நேரடியாக தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று எடுத்தாரா அல்லது அவரும் இந்த வலைதளங்களிலிருந்து எடுத்தாரா, தெரியவில்லை! வலைதளங்களில் வருகின்ற செய்திகள் பெரும்பாலும் உண்மைகள் இருப்பதில்லை! அது அவருக்கே தெரியும்!

இந்த நேரத்தில் நம்மிடம் இன்னொரு கேள்வியும் உண்டு. இந்த செய்திகள் ஏதோ திட்டம் போட்டு, தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக, வெளியாக்கப்படுகின்றதோ என்கிற ஓர் ஐயத்தையும்  ஏற்படுத்துகிறது.

பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்கிற பிரச்சாரம் பல தளங்களில் பெற்றோர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி - இதுவும் ஒரு வகை பிரச்சாரமே - வெளியாவதால் நமது பிரச்சாரத்தை பலவீனமாக்குகிறது. பெற்றோர்களுக்குத் தமிழ்ப்பள்ளிகளின் மீது நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. தமிழ்ப்பள்ளிகளில் இந்து மத எதிர்ப்புப் பிராச்சாரமா என்பதாகவும் பெற்றோர்களிடையே பேசும் நிலையை உருவாக்குகிறது.

யாராக இருந்தாலும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் முதன்மை கோட்பாடே "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்". அப்படியிருக்க அதனை மீற கல்வி அமைச்சில் யாருக்கும் துணிவு உண்டா, என்ன?

இந்து சங்கத் தலைவரும் அதனை அறிந்தவர் தான். அவரே இது போன்ற விஷமத்தனமான அறிக்கைகளை வெளியிடக் கூடாது. அதிலும் இப்போது தான் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர்களுக்கு அது ஒரு பயமுறுத்தலாகவே இருக்கும்.

இதனை அவர் தெரிந்து தான் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.  அதனை அவர் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அது,  பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் என்று சொல்லுவதற்குச் சமம். இல்லாவிட்டால் இப்போது ஏன் அந்த பிரச்சனையைக் கொண்டு வருகிறார்?

எப்படி இருந்தாலும் டத்தோ மோகன் ஷான் இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிக்கை விடுவது சரியான செயல் அல்ல. அது தமிழர்களுக்கு எதிராக - தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக - அவரின் நிலைப்பாடு  அல்லது மலேசிய இந்து சங்கத்தின் நிலைப்பாடு என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment