ஒரு சில நாள்களாக ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனை."உபகார சம்பளத்திட்டத்தில் தமிழ்த் துறைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்" என்பது நமக்குத் தெரியும்.
இப்போது கல்வி அமைச்சே இது பற்றி ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாகச் சொன்னால் இடை நிலைப்பள்ளிகளில் "அளவுக்கு அதிகமான!" தமிழ் ஆசிரியர்கள் இருப்பதால் இந்த ஆண்டு உதவித்திட்டம் தேவைப்படவில்லை என்பது தான் அதன் சுருக்கம்.
உண்மையில் இது பற்றி பேசி எனது அரைகுறை அறிவை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு முழுமையாக தெரியாத ஒரு பிரச்சனை. இது கல்வியாளர்கள் பிரச்சனை. அவர்கள் தான் இதனை முழுமையாக அறிந்தவர்கள்.
ஆனாலும் அரசாங்கத்தில் பணிபுரிவோர் இப்போது வாயைத் திறக்க மாட்டார்கள் நமக்கு ஏன் வம்பு என்பது தான் காரணம். வெளியே கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் சொன்னால் தான் உண்டு. அவர்களிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழுக்கு மறுப்பு என்னும் போது மற்றவர்களைப் போலவே எனக்கும் கோபம் வருகிறது! இடைநிலைப் பள்ளிகளில் அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் என்னும் போது நம்புகிற மாதிரி இல்லை என்பதும் தெரிகிறது. அவ்வளவு தாராளமாகவா கல்வி அமைச்சு நடந்து கொள்ளுகிறது என்கிற கேள்வியும் எழுகிறது.
ஒரு வேளை இப்போது பக்காத்தான் ஆட்சி நடந்து கொண்டிருந்தால் அதனை நம்பலாம். இப்போது பெரிக்காத்தான் ஆட்சி. பெரிக்காத்தான் ஆட்சியில் பாஸ் கட்சி அங்கம் வகிக்கிறது என்கிற உண்மையும் நமக்குத் தெரியும்.
எப்படியோ மேலும் இது பற்றி செய்திகள் வரும். வராமலா போகும்! அதுவரை பொறுமையைக் கடைப்பிடிப்போம்!
No comments:
Post a Comment