ஜனநாயகம் மடிந்து விட்டது, ஜனநாயகம் செத்து விட்டது, ஜனநாயக ஆட்சி இல்லை - என்று இப்படியாகப் பல அரசியல்வாதிகள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆட்சி மாற்றம் எப்போது கொல்லைப்புற வழியாக வந்ததோ அன்றிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன. அப்போது 'கப்சிப்' என்று இருந்தவர்கள் கூட இப்போது ஜனநாயகத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்! இப்போதெல்லாம் யார் எப்போது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவார்கள் என்பது புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரே காரணம் தான்! ஏன், நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என்பது தான் இந்த ஜனநாயகப் புலம்பலுக்குக் காரணம். நாடாளுமன்றத்தைக் கூட்டினால் கொல்லைப்புற ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது அனைவருக்கும் தெரியும்! கவிழ வேண்டும் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் "இது தான் நல்ல நேரம்!" என்று பதவியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்! அவர்கள் வாய் திறப்பதில்லை!
இன்னொரு புறம் ஆட்சி கவிழ்வதை எதிர்ப்பவர்கள். இவர்களோ ஆட்சி மீண்டும் முந்தைய பக்காத்தான் கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள். நாட்டிற்கு நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் என்பதெல்லாம் அனாவசிய செலவு. பலவித பொருளாதார சிக்கல்கள்களை நாடு எதிர்நோக்கும் போது திடீர் தேர்தல் தேவை இல்லை என்று நினைப்பதில் தவறில்லை.
ஆனால் இது அரசியல். இலாப நஷ்டம் பார்க்காமல் அரசியல்வாதிகள் எதையும் பேசுவதில்லை. அது அவரகளின் இயல்பு. அம்னோ அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இப்போது ஜனநாயகத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்!
ஆனால் இவர்களில்லெல்லாம் மிகவும் அரசியல் சாணக்கியர் என்றால் அது பிரதமர் முகைதீன் யாசின் தான்! கோவிட்-19 தொற்றை மிகவும் சாமர்த்தியமாக தனது பதவியை நீட்டித்துக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார். அதனால் தான் அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை கொவிட்-19 தொற்று நீடிக்கும் என்று ஆருடங்கள் சொல்லப்படுகின்றன.
இந்தியா போன்ற நாட்டில் கூட கோவிட்-19 குறைந்து வருகிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் நமது நாட்டில் குறைவதில் கூட அரசியல் விளையாடுகிறது என்கிறார்கள்!
அரசியல் என்பது எத்துணை அதிகாரமிக்கதாக இருக்கிறது என்பது இப்போது நமக்குப் புரிகிறது. என்ன செய்ய> அதிகாரம் நம் கையில் இல்லையே!
செத்துவிட்ட ஜனநாயகத்தை உயிர்ப்பிப்பது நமது கையில் இல்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மக்கள் கையில் இல்லை. எல்லா அதிகாரங்களும் அரசியல்வாதிகள் கையில்.
ஆனால் ஒருவர்க்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. அது தான் மாமன்னர். அவர் மனம் வைக்க வேண்டும்! பொறுத்திருப்போம்!
No comments:
Post a Comment