வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகள் அந்த தொழிலாளர்கள் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். செய்யத் தவறினால் அவர்கள் சிறைத் தண்டனையை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அப்படி செய்யத் தவறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 200,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம் என்பது முதலாளிக்கு மிக மிகத் தேவையான ஒரு நினைவூட்டல்!
நாட்டில் பலர் சட்டத்தை மீறுகின்றனர். அதிலும் முதலாளிகள் என்றால் சட்டத்தை மீறுவதில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல! ஒரே காரணம் தான். அவர்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றனர். அதனால் எப்படியும் தப்பித்து விடலாம் என்கிற மனப்போக்கு அவர்களிடையே அதிகம்.
இந்த சூழலில் மனிதவள அமைச்சரிடமிருந்து இப்படி ஒரு செய்தியைப் படிக்கும் போது "இது முடியுமா?" என்கிற கேள்வியும் எழுகிறது!
இது போன்ற பயமுறுத்தல்களை எத்தனையோ முறை படித்து விட்டோம்! கேட்டு விட்டோம்! இந்த முறை மட்டும் என்ன வாழப் போகிறதாம் என்று தான் கேட்கத் தோன்றுகிறது!
முதலாளிகள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு தப்பித்து விடுகின்றனர்!
ஆனாலும் மனம் தளரவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் இன்னும் நம்பிக்கை உண்டு. சட்டம் தனது கடமையைச் செய்ய ஆரம்பித்துவிட்டால் எப்பேர்ப்பட்ட கொம்பனும் பணிந்து தான் ஆக வேண்டும்.
ஆக, நம்புவோம். தவறு செய்யும் முதலாளிகளுக்குத் தண்டனை உறுதியாகக் கிடைக்கும் என நம்புவோம். அதுவும் அபராதத்தை விட சிறை தண்டனை கேவலமானது என்பது அவர்களுக்கே தெரியும்.
முடிந்தால் அபராதத்தோடு சிறைத் தண்டனையும் கிடைக்க இந்த சட்டம் வழி செய்யும் என நம்புவோம்!
No comments:
Post a Comment