வேலை காரணமாக வெளி நாடு போய் வரும் அமைச்சர்கள் திரும்பி வரும் போது மூன்று நாள்கள் தனிமைப்படுத்தினாலே போதும் என்கிற சுகாதார அமைச்சரின் அறிவிப்பு அபாயகரமானது என்று பல்வேறு தர்ப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது!
நம்மைப் போல் சராசரி மனிதராக இருந்தால் இதிலும் எதுவும்அரசியல் உள்ளதோ என்று யோசிப்போம்! அது தான் நமது இயல்பு! அதுவும் உண்டு. இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது!
ஆனால் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்திருக்கிறது மலேசிய மருத்துவ கல்விக் கழகம். அதே சமயத்தில் மலேசிய மருத்துவ சங்கமும் தனது கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறது.
சராசரி மலேசியர்களைப் பொறுத்தவரை இந்த தொற்று நோயின் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்து மற்ற நாடுகளின் நடைமுறையைத் தான் மலேசியா பின் பற்றி வந்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் 14 நாள்கள் என்றால் அது 14 நாள்கள் தான். அது தான் நிருபிக்கப்பட்டது. அந்த நடைமுறையைத் தான் நாம் பின் பற்றி வருகிறோம். எந்த எதிர்ப்பும் இல்லாமல் மக்களும் பின் பற்றுகிறார்கள். ஒரே காரணம். உலக நாடுகள் அனைத்தும் அதனையே பின் பற்றி வருகின்றனர்.
இப்போது மூன்று நாள்களாக குறைப்பதற்கு அதற்கு அறிவியல் ஆதாரம் வேண்டும். அமைச்சர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் மூன்று நாள்கள் போதும் என்று சுகாதார அமைச்சு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தால் அது அரசியல்வாதிகளின் குறுக்கு வழி முறை! அது அறிவியல் நடைமுறையல்ல. அரசியல்வாதிகளின் நடைமுறை!
உலக சுகாதார நிறுவனத்தின் நடைமுறைகளைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் கண்டுபிடிக்கிற தான்தோன்றித்தனமான நடைமுறைகளை அல்ல!
கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்கும் ஓர் அரசாங்கம் எப்படியெல்லாம் நடந்து கொள்ளும் என்பதற்கு பெரிக்காத்தான் அரசாங்கம் ஓர் எடுத்துக்காட்டு!
இதனையெல்லாம் கேட்டால் உடனே சமயத்திற்கு எதிரி, இனத்திற்கு எதிரி என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்!
மூன்று நாள் போதுமா? போதாது! உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுகிறதோ அதனையே கடைப்பிடிப்போம்!
No comments:
Post a Comment