நமது பிரதமர், டான்ஸ்ரீ முகைதீன் யாசின், எப்படி கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் என்பது நாடே அறியும். அதிசயமில்லை!
இப்போது மாமன்னர் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்போது நடப்பில் உள்ள ஊரடங்கு சட்டம் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்றம் கூடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதாகக் கூறியிருக்கிறார்.ஆனால் வழக்கம் போல் ஊரடங்கு விதிகளை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தான் அவரது அறிவுரை.
ஆனால் முகைதீன் பிரதமராக தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக நிலைத்து நிற்பதற்கு அவரிடம் அபார "திறமைகள்" உண்டு என்பதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். அதாவது "கழுவுற மீனில் நழுவுற மீன்" என்பார்களே அதற்குச் சரியான எடுத்துக்காட்டு என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்!
அவர் அவ்வளவு சீக்கிரத்தில் புறமுதுகு காட்டுபவர் அல்ல! ஓடுபவரும் அல்ல! ஒளிபவரும் அல்ல! அவர் வகிக்கும் பதவியில் இருந்து கொண்டு, சரியோ தவறோ, யாரைப் பயன்படுத்தினால், எதனைப் பயன்படுத்தினால், எந்த சட்டத்தைப் பயன்படுத்தினால், அதில் உள்ள ஓட்டைகள் என்ன - இதனை அத்தனையும் அவர் பயன்படுத்துவார்! அவரிடம் உள்ள சட்ட நிபுணர்கள் அதற்குத்தானே இருக்கிறார்கள்!
அதிகாரம் வலிமையானது! இன்னும் அதிகாரம் அவரிடம் தான் உள்ளது! அவர் கடைசி வரை அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்துவார்! நம்பலாம்! அதிகாரத்தில் இருந்தவர்கள் யாரும் விட்டுக் கொடுத்ததில்லை என்பதையும் நாம் அறிவோம்!
இன்னொரு கேள்வியும் உண்டு. இனி மேல் "தாக்குப்பிடிக்க முடியாது!" என்கிற நிலை வந்தால் அடுத்த 15-வது பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்வாரா அல்லது அன்வார் இப்ராகிடம் பதவியை ஒப்படைப்பாரா? பதவியை ஒப்படைப்பார் என்பதற்கான அறிகுறி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! அவர்கள் சரித்திரத்தில் அப்படி நடந்ததாகவும் நாம் அறியவில்லை! "உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! போ!" என்பதாகத்தான் அமையும் என்று சொல்லலாம்!
ஆனால் அதற்கான பதில் மாமன்னரிடம் தான் உள்ளது. அவர் தான் அதற்கான தீர்ப்பைக் கையில் வைத்திருப்பவர். முதலில் கோவிட்-19 இன்னும் முற்றாக ஒழிந்தபாடில்லை. அதுவும் ஓர் இடையூறு தான். அடுத்த தேர்தல் காலம் வருவதற்கு முன்னர் திடீர்த் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அதவும் வீண் செலவு என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மாமன்னரின் முடிவு எப்படி இருக்கும் அல்லது அனைத்து மாநில சுல்தான்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாடு இப்போது இருக்கும் நிலையில் திடீர்த் தேர்தல் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நேரத்தில் நாடு பல பொருளாதார சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. மக்கள் வேலை இல்லாப் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இந்த நேரத்தில் தேர்தல் என்பது வீண் செலவு.
அதனால் இந்த நடப்பு தேர்தல் காலம் முடியும் வரை அரசாங்கம் தொடர வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
No comments:
Post a Comment