Sunday 21 February 2021

அனைவரும் மலேசியரே!

 "மலாய்க்காரர், இந்தியர், மற்றும் பிற இனததவர் போல சீனர்களும் மலேசியர்களே" என்று ஜொகூர் சுல்தான் கூறியிருப்பது அதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.

ஜொகூர் சுல்தான் தனது மாநில குடிமக்களைப் பார்த்து சொன்னதாக இருந்தாலும் அது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

தனது முன்னோர்கள் 16-ம் நூற்றாண்டிலேயே சீனர்களுடனான நட்புறவை ஏற்படுத்தி கொண்டு, ஜொகூர் மாநில  வளர்ச்சிக்காக அவர்களை  இங்கு வரவழைத்தார்கள் என்பதாக அவர் கூறியிருக்கிறார். ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சீனர்களின் பங்கு அளப்பரியது அதனால் யாரும் அவர்களை வந்தேறிகள் என்று கூறுவதை தான் விரும்பவில்லை என்பதாக அவர் சீனப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாம் ஜொகூர் சுல்தானுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அவர் வெளிப்படையாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது.

அதே போல தமிழர்களின் வரலாறும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசக் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.அதுவும் வெகு விரைவில் வெளியாகும் என நம்பலாம். அப்போது புரியும் யார் வந்தேறிகள் என்று. 

நேற்று வந்தவன் எல்லாம் அரசியலில் தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை வந்தேறிகள் என்கிறான். இவனுடைய பூர்வீகம் அவனுக்கே தெரியும். ஆனாலும் அவன் ஆளுங்கட்சியாம் அதனால் மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறான்!  பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போய்விட்டதாக நினைக்குமாம்! அந்த கதை தான்!

எது எப்படி இருந்தாலும் ஜொகூர் சுல்தான்  மனம் திறந்து  தனது  உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைய நிலையில் இங்கு வந்தேறிகள் என்றால் அது எல்லா  மக்களையுமே குறிக்கும். அதனால் அது தேவைப்படாத ஒரு வார்த்தை.  ஜொகூர் சுல்தான் சொல்வதைப் போல நாம் அனைவரும் மலேசியர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!  அது தான் மலேசியம்!

No comments:

Post a Comment