Monday 22 February 2021

வயது ஒரு தடையல்ல!

 

                                                      திரு சல்மான் அகமட்

திரு சல்மான் அகமட் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர். வயது 65. சுற்றுப்பயணத் துறையின் முன்னாள் துணை இயக்குனர். 2012 - ம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

அவரைப் பற்றி என்ன தான் விசேஷம்?  இந்த ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் SPM பரிட்சை எழுதிய 645 தனியார் பள்ளி மாணவர்களில் அவரும் ஒருவர்! இதைக்  கேட்பதற்கு ஒரு சில மாணவர்களுக்குக் கடுப்பாகத்தான் இருக்கும்! என்ன செய்வது? ஒரு சிலருக்கு, அதுவும் ஒரு சிலருக்குத்தான், கல்வி மீது தீராத மோகம் இருக்கும். கல்வியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை யாராலும் தடுத்து நிறுத்தி விட  முடியாது. அவர்களில் சல்மானும் ஒருவர்.

ஒரு காலக்கட்டத்தில் அவர் பரிட்சை எழுதும் போது அது ஆங்கிலத்தில் இருந்ததால் தனது பாதையை மாற்றி மாரா தொழில்நுடபக் கல்லுரியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது கல்வியைத் தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார்.

"அன்று நான் தவிர்த்த  அந்த பரிட்சையை இன்று நான் எழுதிப் பார்க்கப் போகிறேன். கல்வி எல்லாக் காலங்களிலும் தொடர்வது தான். சாகும் வரை கல்வி தொடரும். கல்விக்கு வயது கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை.  தொட்டிலிருந்து கடைசி காலம் வரை கல்வி உண்டு"  

தான் இப்போது பரிட்சை எழுதக் காரணம் இளைய தலைமுறை கல்வியை அலட்சியமாக நினைக்கக் கூடாது என்பதற்காகத்தான் என்கிறார் சல்மான்.

அவர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். எல்லாமே அனுபவம். 

நாமும் அதைத்தான் சொல்லுகிறோம். பரிட்சைக்காக படிக்க வேண்டும். பரிட்சை இல்லையென்றாலும் படிக்க வேண்டும்.

புத்தகங்கள் படிக்க வேண்டும். நாவல்கள் படிக்க வேண்டும்.நாளிதழ்கள் படிக்க வேண்டும். படிப்பு என்பது தொடர் கல்வி.

65 வயது பெரியவருக்கு இத்தனை அக்கறை இருக்கிறது என்றால் கல்வியை இடையே அறுத்துவிட்டவர்கள் இப்போதும் எப்போதும் கல்வியைத் தொடரலாமே!

கல்வி என்பது அறிவு. அதனை நமதாக்கிக் கொள்வோம்!

No comments:

Post a Comment