Monday 8 February 2021

உணவகங்களுக்கு வாழ்வு கொடுங்கள்!

  உண்மையைச் சொன்னால் உணவகங்கள் பாடு பெரும் பாடு!

ஒரு பக்கம் ஊழியர்கள் பற்றாக்குறை என்று புலம்பல். அத்தோடு கூட நடமாட்டக் கட்டுப்பாடு வேறு அவர்களை அலைகழிக்கிறது. என்ன தான் அவர்களால் செய்ய முடியும்!

நடமாட்டுக் கட்டுப்பாடு என்பது தேவை தான். இப்போது இரவுச் சந்தை என்பதெல்லாம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டுவிட்டன.  ஆட்சியில் உள்ளவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பது தான் இப்போது உள்ள பிரச்சனை!

இரவுச்  சந்தை திறப்பது  என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இரவுச் சந்தையில் நடமாட்டுக் கட்டுப்பாடு என்பதெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். அப்படியே ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் இன்னொருவர் உங்களைக் கடைப்பிடிக்க விடமாட்டார்!

இந்த சூழ்நிலையின் தான் உணவகங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று கேட்பதில் தவறில்லை. நேரத்தைக் கூட்டுங்கள் என்றார்கள் நேரத்தைக் கூட்டினார்கள்! அதோடு சரி! இதைத்தான் பொறுப்பற்ற தனம் என்கிறோம்!

உணவகங்களைத் திறப்பதோ அடைப்பதோ முக்கியமல்ல. சும்மா உணவகங்கள் உணவு பொட்டலங்களை அனுப்பிக்  கொண்டு வியாபாரத்தில் காலந்தள்ள முடியாது!  வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது தான் உணவகங்களால் காலந்தள்ள முடியும்.

ஒன்றைத் தந்தார்கள் ஒன்றைத் தரவில்லை!  என்ன சொல்லுவது? நாட்டின் நிலைமை என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் பதவியில் இருந்தால் இது தான் நடக்கும்!

ஒரு மேசையில் இருவர் உட்கார்ந்து சாப்பிட அனுமதியுங்கள் என்று ஏன் சொல்லுகிறார்கள்? அப்படியே ஒரு ஏழு எட்டு பேர் உள்ள குடும்பம் வந்தாலும்  அவர்கள் நாலைந்து மேசைகளப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதைத்தான் உணவகங்கள் எதிர்பார்க்கின்றன. ஏன்? நாங்கள் கூட அப்படித்தான் செய்கிறோம். வேறு வழி? அது தான் உணவகங்களுக்கு இலாபம் தரும்.

உணவகங்களை அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது!  இது தேவை இல்லாத அச்சுறுத்தல்.

எல்லாரும் பிழைக்க வேண்டும். அரசியல்வாதிகள் மட்டும் தான் பிழைக்க வேண்டும் என்கிற போக்கு இன்றைய அரசாங்கத்தில் மேலோங்கி நிற்கிறதோ என்று தோன்றுகிறது!

இந்த உணவகங்களுக்கு ஒரு விடிவுகாலம் வர வேண்டும். எல்லா வியாபாரங்களும் திறக்கப்பட வேண்டும்.

உணவகங்களின் நிலைமையைக் கொஞ்சம் யோசியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறோம்!

No comments:

Post a Comment