Saturday 20 February 2021

நல்ல முயற்சிகளைப் பாராட்டுவோம்!

 கோவிட்-19  தொற்று நமது தினசரி வாழ்க்கையைத் திருப்பிப்  போட்டுவிட்டது என்பது  உலகமே அறியும்.

நமது நாட்டிலும் திசை தெரியாமலும் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. என்ன செய்வது? இது தான் வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு நாமும் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் தன்னாலான எல்லா வழிகளிலும் அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று இயக்கங்கள்,  மன்றங்கள், பொது மக்கள் - இப்படி பலர் பல வகைகளில் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவி செய்கின்றனர்; உதவி செய்தும்  வருகின்றனர்.

வறியவர் வாட நாம் மட்டும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால் தான் இவ்வளவு உதவிகள்.

மனதிலே ஒரு சிறிய நெருடலும் உண்டு.  பசியைப் போக்க உணவு பொட்டலங்களைக் கொண்டு போய் அவர்களிடம் சேர்த்தாலும் அதனை இன்னும் எத்தனை நாளைக்குத் தொடர முடியும்?  பொதுவாக பொது இயக்கங்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் தங்களது ஆண்டுக் கூட்டத்தில் எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்த உணவு பொட்டலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்! ஒரு சிலர் இந்த நேரத்தில் ஏதாவது பணம் பண்ண வழியிருக்கா என்பதையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்! இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒன்றும் அதிசயமில்லை!

நான் சொல்ல வருவதெல்லாம் இந்த பொட்டலங்கள் கொடுப்பது என்பதெல்லாம் ஒரு தற்காலிக ஏற்பாடு. அவர்களின் தற்காலிக பசியைப் போக்கும்.

ஆனால் அவர்களுக்குத் தேவை எல்லாம் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வேலை.  வேலை வாங்கிக் கொடுப்பது தான் அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவி. அந்த உதவி அவர்களுக்குப் பசியைப் போக்கும், பிள்ளைகளின் கல்வியைத் தொடரச் செய்யும்,  அவர்களின் மாதாந்திர தவணைகளைக் கட்ட வைக்கும்  இப்படி பல கடப்பாடுகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவைகளைப் புறக்கணிக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரே உதவி அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது தான்.

இப்போது நமது இனத்தவர்களுக்குக் கூப்பிட்டு கூப்பிட்டு வேலை கொடுப்பவர்கள் என்றால் அது இந்த காவலாளி வேலை தான். பல நிறுவனங்களுக்குக் காவல் செய்ய ஆள்கள் தேவைப்படுகின்றனர். பலருடைய பிழைப்பு அதில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களும் அதில் பங்கு பெறுகின்றனர். ஒன்றும் இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவது தவிர வேறு என்ன சொல்ல!

அதனால் பதவியில் உள்ள நமது இனத்தவர்கள் முடிந்தவரை இந்த மக்கள் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற இவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். மற்ற உதவிகள் எல்லாம் ஒரு சில காலங்களுக்குத் தான் உதவும்.  ஒரு நிரந்தர வேலை என்பது அவர்கள் வாழ் நாளெல்லாம் அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற உதவும்.

இப்போது தற்காலிகமாக கிடைக்கும் உதவிகள் தொடரட்டும். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை  ஏற்படுத்திக் கொடுப்பது தான் நிரந்தரமான உதவி.

இந்த மக்களுக்கு முன் நின்று உதவும் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டுகளும்! நல்ல முயற்சி தொடரட்டும்!

No comments:

Post a Comment