Tuesday 9 February 2021

மகள் படிப்புக்காக தாய் கையேந்துகிறார்

"பிச்சை புகினும் கற்கை  நன்றே" என்றார் பெரியோர்.

அந்த அளவுக்கு நமது இனம் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த இனம். பிச்சை எடுக்க நேரிடினும் கல்வியைத் தடை செய்யாதே என்பது கல்வியின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.

அதனால் தான் தோட்டமொன்றில் வேலை செய்கின்ற தாய் தனது மகளை மருத்துவம் படிக்க வைத்திருக்கிறார். அவருடைய மகள் ரஷ்ய மருத்துவக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு மாணவி. இறுதியாண்டுக்கான கலவி கட்டணத்தை கட்ட வழியில்லாமல் தடுமாறும் அவர் பொது மக்களின் உதவியை நாடுகிறார்.

மகள் நிஷாந்தினி. லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்றவர். அதன் பின்னர் மந்தின் இடைநிலைப் பள்ளியில் சிறந்த முறையில் தேர்வு பெற்று இப்போது ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வருகிறார். கடைசி ஆண்டு. கொஞ்சம் பொருளாதாரத் தடுமாற்றம்.

இந்த நேரத்தில்  ஒரு சின்ன ஆலோசனை.

இந்த மாணவி நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர். நெகிரி மாநிலம் எதிர்கட்சியான பக்காத்தான் ஆட்சியின் கீழ் வருகிறது.

நெகிரி மாநிலத்தில் இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே  இருக்கின்றனர்.  மாண்புமிகு ஜ. அருள்குமார்,  மாண்புமிகு எஸ்.வீரப்பன், மாண்புமிகு  டத்தோ ரவி,  மாண்புமிகு ப.குணசேகரன் மாண்புமிகு மேரி ஜோசஃபின். ம.இ.கா.வின் சார்பில் எல்.மாணிக்கம் போன்றோர் அங்கம் வகிக்கின்றனர்.

பக்காத்தான் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. அவர்கள் இந்த மாணவிக்கான உதவியைத் தாராளமாக  செய்யலாம். செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இப்படி ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வருகிறது என்றால்  - அவர்கள் உங்களைத் தேடி வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் -  நீங்கள்  ம.இ.கா.வின் வழியைப் பின்பற்றுகிறீர்கள் என்பது பொருள். அது மக்கள் சேவை அல்ல.  நீங்களே அவர்களைத் தேடிப் போக வேண்டும்.  அவர்களின் தேவை அறிந்து நீங்கள் உதவ முன் வரவேண்டும்.

அரசியல்வாதிகள் உதவுவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இப்போதும் நீங்கள் பல வழிகளில் உதவி செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் ஒரு மாணவி அதுவும் மருத்துவம் பயிலும் கடைசி  ஆண்டு மாணவி உங்களின் உதவி அந்த மாணவிக்கு நிச்சயம் தேவை. 

உங்கள் ஆட்சியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ம.இ.கா. வழியைப் பின் பற்றாதீர்கள். அந்த வழி தோல்வி அடைந்துவிட்டது என்பது  மக்களுக்குத் தெரியும். நெகிரி செம்பிலானில்  எத்தனை இந்திய மாணவர்களுக்கு கல்விக்காக உதவி தேவையோ அதனை நீங்கள் செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள். 

ஒரு ஏழைத்தாயின் கனவு நிறைவேற வேண்டும். ஒரு மகளின் கனவு வெற்றியடைய வேண்டும்.

நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்!


No comments:

Post a Comment