டோமி தாமஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது புத்தத்தில் குறிப்பிட்டபடி முந்நாள் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த முகைதீன் யாசின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மேல் ஏன் அளவற்ற எதிரியாக தன்னைக் காண்பித்துக் கொண்டார் என்பது தெரியவில்லை!
புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்ட அந்த 12 பேரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யக் கூடாது என்பதில் அவர் அதிகத் தீவிரமாக இருந்தார் என்பதாக டோமி குறிப்பிட்டிருக்கிறார்.
ஏன்? எதனால்? இப்படி ஒரு நிலை அவருக்கு என்பது நமக்குப் புரியவில்லை. உண்மையில் அமைச்சருக்கு யார் மேல் அந்த அளவுக்குக் கோபம்? விடுதலைப்புலிகளின் மீதா? தமிழர்கள் மீதா? ஜ.செ.க. மீதா? இத்தனைக்கும் அவர் உள்துறை அமைச்சராக இருக்குக் காரணமே ஜ.செ.க. வும் அவருக்குக் கொடுத்த ஆதரவும் ஒரு காரணம்
விடுதலைப் புலிகளைப் பற்றி எந்த அளவுக்கு அவர் அறிந்தவர்? அரசாங்கம் கொடுக்கின்ற விளக்கத்தின் மேல் அவருக்கு வேறு எதையும் தெரிய வாய்ப்பில்லை! அப்படி தெரிந்தாலும் அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை!
விடுதலைப் புலிகளின் இயக்கம் என்பது இப்போது இல்லை. அதனை மாபெரும் சாம்ராஜ்யங்கள் சேர்ந்து ஒடுக்கிவிட்டன. அது நீர்த்துப் போன ஓர் இயக்கம். அதற்கு உயிர் கொடுக்க எந்த வாய்ப்புமில்லை. இல்லாத ஓர் இயக்கத்திற்காக 12 தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லி அவர்களைச் சிறையில் அடைத்து நமது அரசாங்கம் தமிழர்களைக் கேவலப்படுத்தியது தான் மிச்சம்.
கையில் அதிகாரம் இருந்தால் கையாலாகதவன் கூட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேசுவான்! கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு முகைதீன் ஆட்டம் அதிகமாகவே ஆடிவிட்டார்! இன்றைய அரசாங்கத்திலும் அவர் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்!
தமிழர்கள் மீது அவருக்கென்ன அப்படி கோபம்? அவர்கள் என்ன நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களாக இருந்தார்களா? இருக்கிறார்களா? நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தார்களா? அவர் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்த அளவுக்கு எந்த தமிழனாவது கொள்ளையடித்திருப்பானா!
தமிழர்கள் மீது கோபப்படுகிற அளவுக்கு அவர்கள் கெட்டவர்களாக இருந்ததில்லை என்பது தான் உண்மை!
ஜ.செ.க. கட்சியின் மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். அது சீனர்கள் கட்சி என்பது தான் மலாய் அரசியல்வாதிகள் வைக்கின்ற குற்றச்சாட்டு! அது அரசியல்வாதிகள் மட்டுமே! ஆனால் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தானே அரசாங்கம் அமைத்தீர்கள். சீனர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமலா இருந்தார்கள்!
ஓர் அமைச்சர் இந்த அளவுக்குத் தன்னை தாழ்த்திக் கொள்வார் என்று நம்ப முடியவில்லை! கைது செய்வதற்கு சரியான காரணங்கள் இருக்க வேண்டும். தமிழர் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தார்கள், நினைவு நாள் கொண்டாடினார்கள் என்பதெல்லாம் ஒரு காரணமா! உலகத் தமிழர்கள் இன்றளவும் அதைச் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்!
அவருக்குத் தமிழர்கள் மீது கோபம் என்பதைவிட ஜ.செ.க. மீது அவருக்குக் கோபம் என்பதாகவே நினைக்கிறேன்! ஆமாம் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் முக்கிய பதவிகளை தாரை வார்த்து விட்டோமே என்கிற அவரின் கோபமே இதற்குக் காரணமாக இருக்கலாம்!
ஆனால் அதற்காக விடுதலைப் புலிகள் உயிரோடு வந்து விட்டார்கள் என்று சொல்லி அடித்து கூத்து இருக்கிறதே - இப்படி செய்ய உங்களால் மட்டுமே முடியும்!
No comments:
Post a Comment