Friday 5 February 2021

எங்களுக்கும் அந்த வருத்தம் உண்டு!

சட்டத்துறைத் தலைவராக டோமி தோமஸ்ஸை நியமித்திருக்கக் கூடாது என இப்போது நினைப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியிருக்கிறார்.  தான் தவறு செய்து விட்டதாக அவர் நினைக்கிறார்.

அந்த முடிவை அவர் எடுத்தற்காக நாமும் வருத்தப்படுகிறோம்! ஆனால் அவரே சொல்லியிருப்பது போல "இதற்கு முன் இருந்த சில சட்டத்துறைத் தலைவர்கள் தொழில் நிபுணத்துவத்திற்கு ஏற்ப செயல்படவில்லை!" என்பதாக அவரே அந்த மற்ற சட்டத்துறைத் தலைவர்களைப் பற்றி குறைகளையும்  கூறியிருக்கிறார்.

ஆக அவர் எதிர்பார்த்தபடி அல்லது நினைத்தபடி சட்டத்துறைத் தலைவர்கள் பலர் செயல்படவில்லை என்பதாக அவர் கூறுகிறார். அந்த வரிசையில் இப்போது டோமி தாமஸ்ஸும் சேர்ந்து கொண்டார்! அவ்வளவு தான்!

ஆனால் தேர்தல் வைத்து ஒரு பிரதமரைத் தேர்ந்து எடுத்தார்களே அதை நினைத்துத்  தான் இந்நாட்டு மக்கள் அதிக துக்கம் கொண்டாடுகிறார்கள் என்பதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மறந்து விடக் கூடாது! டோமி தோமஸ் சட்டத்துறைத் தலைவர் என்கிற முறையில் அவருக்கு மக்களிடம் நேரடியாக வேலை இல்லை.

ஆனால் நாட்டின் பிரதமர் என்பது அப்படி இல்லை.  மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவி. அந்த சட்டத்துறைத் தலைவர்களைக் கூட, தனக்கு ஜால்ரா போட,  பிரதமர் தான் தெர்ந்தெடுக்கிறார். அதனால் மக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

இப்போது நாட்டில் நடக்கும் பிரச்சனை என்ன? எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எல்லாமே கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல நடந்து கொண்டிருக்கின்றன! யார் தான் பொறுப்பு?  ஒருவருமே இல்லை என்பதாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது! 

இப்படி ஒரு பொறுப்பற்ற கொல்லைப்புற அரசாங்கம்  பதவியேற்றதற்கு யார் காரணம்? சாட்சாத் நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தான் காரணம் என்றால் அவர் ஏற்றுக் கொள்வாரா? இதுவரை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை! இனி மேலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை! ஏன் டோமி தாமஸ் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது!

இப்படி ஓர் அரசாங்கம் அமைந்ததற்கு மக்கள் தான் கண்ணீர் வடிக்கின்றனர். பொருளாதாரப் பின்னடைவு, வேலையில்லாப் பிரச்சனை, கோவிட்-19 தொற்று - இப்படிப் பல பிரச்சனைகள் மக்களை அலைக்கழிக்கின்றன. ஒரு நிரந்திர தீர்வை நோக்கி நாடு  நகர்த்தப்படவில்லை!

இதற்கெல்லாம் காரணம் டாக்டர் மகாதிர்!  நம்மால் என்ன செய்ய முடியும்?  தவறான ஒரு மனிதரை பிரதமராக தேர்ந்தெடுத்தற்காக நாம் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை! அவரை இந்நாட்டு பிரதமராக கொண்டு வந்ததற்காக - நியமித்ததற்காக - கொண்டு வந்திருக்கக் கூடாது என்று இப்போது நாம் நினைக்கிறோம்!

ஆனால் புண்ணியமில்லையே!

No comments:

Post a Comment