Saturday 20 February 2021

ஏன் இந்த திடீர்ப்பாசம்?

 பொங்கல் விழா காலங்காலமாக தமிழர்களிடையே கொண்டாடப்படும் அறுவடைத்  திருவிழா.

அது வரை எந்த சந்தேகமுமில்லை.

அந்த திருவிழாவையும் சமய சாயம் பூசி அதை இந்து சமய விழா என்பதாக புதிதாக ஒரு புரளியைக் கிளப்புகின்றனர் சிலர். இத்தனை ஆண்டுகள் இல்லாத இந்த பற்றும் பாசமும் எங்கிருந்து வந்தது என்பது ஓரளவு நமக்குப் புரிகிறது.

பொங்கல் விழா என்பது விவசாயிகள் கொண்டாடும் பெருவிழா. விவசாயிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் - இப்படி பல சமயத்தினர் இருக்கின்றனர்.  பொதுவாக தமிழக விவசாயிகளில் இந்துக்கள் அதிகம் என்பது உண்மை.  அதனால் அது இந்துக்களின் சமயவிழா என்பது தவறு. அப்படியென்றால் முஸ்லிம்கள், கிறித்துவர்களுக்கென்று தனியாக ஒர் பொங்கல் விழா இருக்க வேண்டுமே!  தமிழர்கள் அப்படியெல்லாம் பிரிய வழியில்லை. தமிழர்களை அப்படி பிரிக்கவும் முடியாது.  

முதலில் பொங்கல் என்பது சமய விழாவே அல்ல. அவரவர் தங்களது சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இன்னொரு முக்கிய காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாத விவசாயிகளும் இருக்கின்றனர். ஆக,  கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படி இந்த நிலையில் அதனைச் சமய விழா என்று சொல்ல வாய்ப்பில்லை.

"இல்லை! அது இந்து சமய விழா தான்"  என்று நீங்கள் அடித்துச் சொல்ல நினைத்தால், சரி! சொல்லிவிட்டுப் போங்கள்! முதலில் இங்கு கொண்டாடுபவர்களுக்கு மாடுகளே இல்லை! விவசாய நிலமே இல்லை!  மாடுகளுக்கு - அது இந்துவா, முஸ்லிமா, கிறித்துவமா என்று தெரியப் போவதும் இல்லை!

மாடுகளுக்குத் தெரியாது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். மனிதர்களுக்கும் தெரியாது என்றால் அதனையும் ஏற்றுக் கொள்வோம்!

என்ன ஆகிவிடப் போகிறது? இவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காக முஸ்லிம்களும், கிறித்துவர்களும் பொங்கல் கொண்டாடாமலா இருக்கப் போகிறார்கள்!

இதெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் வருஷத்துப் பாரம்பரியம். அதனை சும்மா ஏதோ ஏதோ பெயரைச் சொல்லி தமிழர்களைத் திசைத் திருப்புவது இப்போது நடந்து கொண்டிருக்கிறது! அவ்வளவு தான்!

பார்ப்போம்.  இந்த ஆட்டம் எவ்வளவு தூரத்திற்கும் போகும் என்று பார்ப்போம்!

No comments:

Post a Comment