இன்று (13-2-2021) ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீீீீீீீீீீீீகரிக்கப்பட்ட தினம் உலக வானொலி தினம். இன்றோடு வானொலி புழக்கத்திற்கு வந்து சரியாக 110 ஆண்டுகள் ஆகின்றன.
இன்றைய தலைமுறையினருக்கு அன்றைய அந்த வானொலியின் பெருமைகளை அறிய வாய்ப்பில்லை. இப்போது நாம் காரில் செல்லும் போது மட்டும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அத்தோடு சரி! காரணம் இப்போதெல்லாம் கையில் ஒரு கைபேசி இருந்தாலே போதும் உலகம் நம் கையில்!
எனது பள்ளிக் காலத்தில் எனது தந்தையார் முதன் முதலில் எங்கள் வீட்டில் வாங்கிய வானொலிப் பெட்டி என்ன என்பது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
அது ஓரு Grundig வானொலிப் பெட்டி. ரந்தோ பட்டணத்தில் அதனை வாங்கினார். அந்த வானொலிப் பெட்டி எனக்காக வாங்கப்பட்டது. எனது பெற்றோர்களுக்கு வானொலி கேட்கும் பழக்கும் இல்லை.
அந்த வானொலிப் பெட்டியின் மூலம் இந்த உலகத்தையே வலம் வந்திருப்பேன்! தமிழ் எங்கு ஒலிக்கிறதோ அங்கெல்லாம் நான் போயிருப்பேன்! உள்ளூர் வானொலி ஒலிபரப்பில் சிங்கை வானொலியும், மலாக்கா வானொலியும் மிகவும் பிரபலம். நேயர் விருப்பம் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டியிருக்கிறேன். சீனாவின் தமிழ் ஒலிபரப்பு, பிபிசி ஒலிபரப்பு, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு - எல்லாமே அத்துப்படி. அப்போது நமது வானொலியில் "கலப்படம்" என்பது மிகவும் பிரபலம்.
வானொலி பிரபலங்களில் ஒரு சில பெயர்கள் ஞாபத்திற்கு வருகிறது. பைரோஜி நாராயணன், சீகோன், சரஸ்வதி சுவாமிநாதன், ந.பழனிவேலு, அ.முருகையன், மா.இராமையா, செசிலியா, மலாக்கா தெரெசா போன்றோர் ஞாபகத்திற்கு வருகின்றனர். இலங்கை வானொலியின் மையில்வாகனம் மிகப் பிரபலம். அகில இந்திய வானொலியின் தர்மாம்பாள் - பெயரில் கொஞ்சம் தடுமாற்றம், மன்னிக்க!
அந்த காலக்கட்டத்தில் வானொலி இல்லையென்றால் எந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லை. அதனால் இரவு முழுவதும் வானொலி! வானொலி! வானொலி! தான். அப்படி ஒரு காலக் கட்டம் அது.
இன்றைய தொலைக்காட்சிகள் எந்த அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதோ அன்று வானொலிகள் அந்த அளவுக்கு பிரபலம்!
வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி உண்மையிலேயே மகா மகா மனிதர்! உலகம் இருக்கும் அளவும் அவரது பெயர் இருக்கும்!
No comments:
Post a Comment