Thursday 18 February 2021

ஏன் "முஸ்லிம்" ஆசிரியர்கள்?

 தாய் மொழிப்பள்ளிகள் தேவை இல்லை என்பதாக முஸ்லிம் ஆசிரியர் சங்கம் வழக்குத் தொடுத்திருக்கிறது.

இங்கு முஸ்லிம் சங்கம் என்பது மத ரீதியான ஒரு சங்கம். முஸ்லிம் ஆசிரியர்கள் என்பது அவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் அரபு மொழி படித்துக் கொடுப்பவர்கள் என்பதாகத் தான் நான் பார்க்கிறேன்.

அப்படியென்றால் அரபு மொழியும் தாய் மொழிப்பள்ளிகளாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளுகிறோம்.

மதத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் ஏன் மொழி சார்ந்து வழக்கைத் தொடுக்கின்றனர்? அவர்களது கடமை என்பது மதத்தைப் போதிப்பது தான்.  மொழி என்பது அவர்களது பிரச்சனை அல்ல.

அதுவும் இஸ்லாமிய மார்க்கம் என்பது உலக அளவில் பல  மொழிகளில்  கற்றுத் தரப்படுகின்றது. அதே போலத் தான் அது தமிழ், சீன, அரபு  மொழிகளிலும் கற்றுத் தரப்படுகின்றது. அப்படி செய்வதில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஏதேனும் வருத்தம் உண்டா என்பது தெரியவில்லை.

மேலே குறிப்பிட்ட மூன்று மொழிகளுமே செம்மொழி அந்தஸ்த்தைப் பெற்றவை.  மூன்று மொழிகளுமே நமது நாட்டில் இன்னும் பயன்பாட்டில் உள்ள மொழிகள்  என்பதே நமக்குப் பெருமை. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு அதனால் என்ன சிறுமை வந்துவிட்டது?

ஒரு மதத்தின் பெருமை  என்பதே அது பல மொழிகளில் போதிக்கப்படுகிறது என்பது தான். வேண்டாம்! இஸ்லாம், மற்ற மொழிகளில் அதாவது சீன, தமிழ் மொழியில் போதிக்க வேண்டாம் என்பது தான் முஸ்லிம் ஆசிரியர்களின் நிலையா? 

அப்படி சொல்ல அவர்களுக்கு உரிமையில்லை.  மற்றவர்களின் உரிமைகளில் கை வைக்க அவர்களுக்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. சமயம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவில்லை!

உண்மையைச் சொன்னால் தாய் மொழிப்பள்ளிகள் இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் அல்ல. அவைகள் எல்லாம் தேசியப் பள்ளிகளின் நடைமுறைகளைத்தான் பின் பற்றுகின்றன.

இதில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை!

No comments:

Post a Comment