Sunday 28 February 2021

தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள்

 

                           நன்றி:  வணக்கம் மலேசியா

கடந்த சில வருடங்களாக நமது தமிழ்ப்பள்ளிகள் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.

இப்போது சமீபத்தில் இணைய வாயிலாக நடைபெற்ற இந்தோனேசிய இளம் அறிவியலாளர் போட்டியில் தாமான்  மேலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களான யுவிக்கா மகா கணபதி, கைலேஸ்,  கவிஷா  ஆகிய மூன்று மாணவர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர். அத்தோடு இந்தோனேசிய இளம் அறிவியலாளர்  சங்கத்தின்  சிறப்பு விருதையும்  பெற்றனர்.

இதுவே இந்த ஆண்டு இவர்கள் பெற்ற முதல் தங்கப்பதக்கம். நமது வாழ்த்துகள்!

இவர்களோடு போட்டியில் கலந்து கொண்ட மலேசியாவைத் தவிர்த்து மெக்சிக்கோ, ஈரான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா, நேப்பாளம்,  ஹாங்காங், பிலிப்பின்ஸ், சூடான், துருக்கி, வியட்னாம் உட்பட 20 நாடுகளிலிருந்து 500 மாணவர்களுக்கு மேல் இந்த அறிவியல் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு இன்னும் பல தமிழ்ப்பள்ளிகள் இது போன்ற போட்டிகளில் உலகளவில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள் என்னும் நம்பிக்கையும் நமக்கு உண்டு.

நமது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேருங்கள் என்கிற கோஷம் இப்போது அதிகம் கேட்கிறது.  "தமிழ் எங்கள் உயிர்" என்கிறோம். "எங்கள் உயிருக்கு நேர்" என்கிறோம். ஆனாலும் தமிழ் ஏழைகளுக்குத் தான் போய்ச் சேருகிறது!  தமிழ் மூலம் படித்துத் தேறியவன் அவன் பிள்ளைகள் என்று வரும் போது பாதை மாறுகிறான்!

அடித்துப் பேசும் அரசியல்வாதி தனது பிள்ளைகளின் நலன் என்று வரும் போது அவனும் தன்னை மாற்றிக் கொள்ளுகிறான்! நமது தலைவர்களின் பிள்ளைகள் யாருக்கும் தமிழ் தெரியாது என்று தான் சொல்லுகின்றனர்! ஆனால் "தமிழ்! தமிழ்!" என்று உணர்ச்சி வசப்படுகின்றார்கள்!

தமிழ்ப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் என்பதில் குறைபாடில்லை.  ஆனால் அதன் கட்டடங்கள் தான் கண்ணை  உறுத்துகின்றன. அதுவும் இப்போது -  அந்த குறைபாடுகள் - இப்போது களையப்பட்டு வருகின்றன. பல பள்ளிகள் தரமான கட்டடங்களில் இயங்குகின்றன. வசதி படைத்த பெற்றோர்கள் இப்போது தான்  தமிழ்ப்பள்ளிகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்!   அதற்காகவும் நன்றி சொல்லுகிறோம்.

பெற்றோர்களை ஈர்ப்பதற்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரே வழி தான் உண்டு. அவர்களுடைய சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். இன்று நமது பள்ளி மாணவர்கள் உலகளவில் பல சாதனைகள் புரிகின்றனர்.  நிறைய முதல் பரிசுகள், தங்கப்பதக்கங்கள். இந்த பரிசுகள் பெறுவதற்கு அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல.   நூற்றுக்கணக்கான பள்ளிகள், ஆயிரக்கணக்கான   மாணவர்கள். இவர்களையெல்லாம் தாண்டி தான் தங்கப்பதக்கங்கள்,  வெண்கலப்பதக்கங்களைப் பெறுகின்றனர்.

உலகளவில் அறிவியல் போட்டிகள், உலகளவில் பேச்சுப் போட்டிகள், நாடகப்போட்டிகள் இப்படி மாணவர்கள் பரிசுகளை அள்ளுகின்றனர்.

வருங்காலங்களில் மாணவர்களின் உலக சாதனைகள் தான் பெற்றோர்களுக்குத் தமிழ்ப்பள்ளிகள் மீதான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். அதற்குத்  தலைமையாசிரியர்களும் ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.

மாணவர்களே!  உங்கள் சாதனைகள் தான் தாய்மொழி பள்ளிகளுக்கு ஓர் உந்துதலை ஏற்படுத்தும்!


No comments:

Post a Comment