Tuesday 16 February 2021

நல்ல முன்னுதாரணங்கள் தேவை!

 சமீபத்தில் பினாங்கு,  பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியைப் பற்றிய செய்தியைப் படித்த போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் என்பது தலைமையாசிரியர்களின் கையில் தான் உள்ளது என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதனை நான் நேரிடையாக பார்த்தவன்.

தலைமையாசிரியர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால் பலவற்றை சாதிக்க முடியும்.

இன்று பல தமிழ்ப்பள்ளிகள் உலகளவில் பல சாதனைகளைப் புரிகின்றனர். விஞ்ஞானக் கண்டுப் பிடிப்புக்கள் பலவற்றைக்  கண்டுப் பிடித்து சாதனைகள் பல  புரிகின்றனர் பேச்சுப் போட்டிகளில் பங்குப் பெற்று பரிசுகள் பெறுகின்றனர். நாடகப் போட்டிகளிலும்  பரிசுகள் பெறுகின்றனர். இவைகள் எல்லாம் உலக அளவில் கிடைக்கின்ற  அங்கீகாரங்கள்.

இந்த வெற்றிகள் எல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு தான்  கிடைக்கின்றன. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவைகள் அனைத்தும் சரியான தலைமை இருக்கும் வரை தான். இங்கு தலைமையாசிரியர்கள் தான் தலையாய காரணமாக இருக்கின்றனர்.

இன்று பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியும் அந்த வரிசையில் சேருகின்றது. இன்றைய கோவிட்-19 காலக் கட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் கணினி தேவைப்படுகின்றது. இன்று பல தலைமையாசிரியர்கள் நன்கொடைகளுக்காக  அலைந்து திரிகின்றனர். என்ன செய்வது? அவர்களுக்குத் தெரிந்த வழி அது தான். கொடுப்பவர்களும் ஒன்றோ இரண்டோ கொடுக்கலாம். அரசாங்கம் எப்போது கொடுக்கும்? தெரியாது. ஆனால் பாடங்கள் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கைபேசிகளிலும் பாடங்கள் படிக்கலாம். ஆனால் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கின்றது என்பது பெற்றோர்களுக்குத் தெரிகிறது.

எப்படி சுற்றிப் பார்த்தாலும் கணினியே சிறந்த வழி. அதற்கு என்ன செய்ய முடியும் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி நல்லதொரு வழியைக் காட்டியிருக்கிறது. இன்னும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வரவேற்கிறோம். மாணவர்கள் பயன் பெற வேண்டும்.

இன்றைய நிலையில் மாணவர்களில் பலர் கணினி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். ஏழ்மை தான் காரணம். அதுவும் அப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பத்திற்கு விடிவு காலம் இல்லை.

ஆனால் அவர்களும் படிக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.  இப்போது நமது சமுதாயத்தின் முன்  உள்ள தலையாய பிரச்சனை இது தான்.

இன்னும் பல வழிகள் இருக்கலாம்.  அவைகள் அனைத்தும் நமக்கு முன்னுதாரணங்களாக இருக்க வேண்டும். அது போதும்!

No comments:

Post a Comment