Wednesday 17 February 2021

மீண்டும் வங்காளதேசிகளா!

 ஒன்றும் நமக்குப் புரியவில்லை!

நாட்டில் இப்போது இருக்கும் வங்காளதேசிகள் குறைந்தா போய்விட்டார்கள்? இப்போது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஏன் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை!

நாட்டின் நிலைமை சரியாக இல்லை என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனால் அரசாங்கத்திற்கு ஏன் புரியவில்லை என்பது தான் கேள்வி.

கோவிட்-19 தொற்றை வைத்துக் கொண்டு கொல்லைப்புற அரசாங்கத்தைக்  கோலோச்சும் இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை எப்படி எடுக்க முடியும்?

ஒரு புறம் கோவிட்-19. அதனால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. மக்களிடையே வேலை இல்லாப் பிரச்சனை. மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கத்திற்கு வழி காட்ட ஆளில்லை. கல்வியை முடித்துவிட்டு வரும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை.  இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அரசாங்கம் துணிவோடு சில செயல்திட்டங்களைச்  செயல்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் முடியவில்லை! அதற்கான பலம் நாடாளுமன்றத்தில் போதவில்லை! அதனால் தொற்று நோயை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது!

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்  இலட்சக்கணக்கில் நாட்டில் இருக்கின்றனர். அதில் பலர் எந்தவித ஆவணங்களும் இல்லாதவர்கள். இவர்களால் நாட்டில் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்கள் இருக்கும் வரை தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் வெளியே வந்து சிகிச்சை பெற பயப்படுகின்றனர்.  காரணம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்கிற பயம் அவர்களுக்குண்டு.

புதிதாக வரும் வங்காளதேசிகளும் அவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்குச் செல்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாள் முடிந்ததும் தங்களது ஆவணங்களை விற்றுவிட்டு அவர்களும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பார்கள்.  அது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும் வங்காளதேசிகளை இங்கு வேலைக்கு வரவைப்பது என்பது சரியான அணுகு முறையல்ல. முதலில் இப்போது இங்கு இருப்பவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டு பின்னர் மற்ற வழிவகைகளை யோசிக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை இது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ ஒரு சில மேல்தட்டு, கீழ்தட்டு  அரசியல்வாதிகள் பணம் பார்க்க வேண்டும் என்பதற்காக நாட்டின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள். ஏற்கனவே நாட்டில் குவிந்து கிடக்கும் அந்நியர்களுக்கு நல்லதொரு நீதி கிடைக்க வேண்டும்.

வெளி நாட்டவரை வைத்து பணம் பண்ண நினைப்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!

No comments:

Post a Comment