Sunday 7 February 2021

காலத்தால் செய்த உதவி!

 நாம் பல வழிகளில் பலருக்கு உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் அது பெரிதல்ல.

தேவையான நேரத்தில் தேவையான உதவியைச் செய்வதே எல்லா உதவிகளிலும் சிறந்த உதவி.

கெடா மாநிலத்தைச் சேர்ந்த தர்ஸாவனி சேகர் இந்தோனேசிய உதாயான மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு மருத்துவ  மாணவி. அவர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் மூன்று தவணைகள் கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாத சூழ்நிலையில் அவர் தனது வாட்ஸ்ஸப் மூலம் மலேசியர்களில் உதவியை நாடி உள்ளார்.

அந்த கட்டணத்தைக் கட்ட தவறினால் அவர் படித்த படிப்பு எல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போகும். இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்த கெடா மாநில சமூக ஆர்வலர் ஜி.கே.குணா அதற்காக இந்திய சமூகத்தினரின் உதவியை நாடி அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம்.

அந்த சமூக ஆர்வலர் அந்த காரியத்தை முன்னெடுத்தார்.  இந்தியர்கள் அந்த மாணவிக்கு உதவ முன் வந்தனர். அந்த மாணவியின் பொருளக வங்கிக்  கணக்கில் போதுமான நிதியை அனுப்பி வைத்தனர்.

இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என நான் நம்புகிறேன். நாம் ஒன்று சேர்ந்தால் நடக்காததும் நடக்கும். இப்படி எத்தனையோ மாணவர்கள் கடைசி நேரத்தில் பணம் பற்றாக்குறையால் படிக்க முடியாமல் நாடு திரும்பி விட்டனர்.

நாம் ஒன்று சேர்ந்தால் அது பலம். கெடா இந்தியர்கள் அதனைச் சாதித்திருக்கின்றனர். நாம் யாரும் சாதிக்கலாம். அரசியல்வாதிகள் உதவ முடிந்தால் நல்லது. அரசாங்கம் உதவ முடிந்தால் நல்லது.  

அவர்கள் உதவ முன் வரவில்லையென்றால்...? நாம் தான் உதவுவதை முன்னெடுக்க வேண்டும்....!   அரசியல்வாதிகளை நம்புவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் சொல்வதைத்தான் அரசாங்க கேட்கும்!

எல்லாவற்றையும் விட நம்மை நாமே நம்ப வேண்டும். ஒன்று சேர்ந்தால் தான்  உயர்வு. எல்லாப் பிரச்சனைகளையும் நாம் ஒன்று சேர்ந்தால் தீர்த்துவிடலாம்.  எல்லாப் பிரச்சனைகளிலும் நமக்கு கருத்து வேறுபாடுண்டு. ஆனால் கல்விப் பிரச்சனையில் மட்டும் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.

என்ன தான் ஒருவனை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கல்வி, கல்வி உதவி என்று வரும் போது நாம் அவனுக்கு உதவ வேண்டும். அவன் கல்வியைக் கற்றுக் கொண்டால் அவன் சிந்திப்பான். அதுவே நமது வெற்றி!

கெடா இந்திய மக்களுக்கு நன்றி! முன் எடுத்த ஜி.கே. குணாவுக்கு நன்றி! இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை என்பதை மெய்ப்பித்து விட்டீர்கள்!

No comments:

Post a Comment