Tuesday 25 August 2020

சின்ன வயது! உயர்ந்த உள்ளம்!

 

 

சின்ன வயது இளைஞன் தான், உள்ளமோ மகா மகா பெரிசு என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவ கோடிசுவரனாக இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை அல்லது இலட்சாதிபதியாக இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை! அல்லது ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்க வேண்டும் என்னும் அவசியமில்லை!

நமக்குக் கிடைப்பதில் கொஞ்சம் மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் அதுவே போதும்.  நமது சமுதாயத்தையே முன்னேற்றி விடலாம்! குடிப்பதில் காட்டும் ஆர்வத்தை வேறெதிலும் நாம் காட்டுவதில்லையே!  பெருத்த சோகம்! என்ன செய்வது?

மேலே படத்தில் காணப்படும் அந்த இளைஞனுக்கு சுமார் 20-25 வயது இருக்கலாம். பெயர் தமிழரசன். மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்தவர்.  பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்தவர்.  ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து பி.எஸ்ஸி வரை கல்வி கற்றவர். வேலை தேடிச் சென்னை வந்தவருக்குப் பசியும் பட்டினியும்  தான் கிடைத்தது. சென்னை அவரை வாழ வைக்கவில்லை, பிச்சை எடுக்கத்தான் வைத்தது. திரும்பவும்  அலங்காநல்லூர் வந்தார்.   தேனீர் வியாபாரத்தில் ஈடுபட்டார். 

இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற பணத்தில், ஒரு பகுதியை, அவரால் முடிந்த அளவுக்கு ஒரு சில ஏழை மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்!  அந்த உணவுகளையும் அவரே தயார் செய்கிறார்.அத்தோடு சமீபத்தில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தனி ஆளாக போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு ஒரு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்னும் செய்தியும் வேளியாயிருக்கிறது. அந்த தையல் மெஷினின் விலை ருபாய் பதினெட்டாயிரம்!

இதிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் சிறிதாக இருக்கலாம்.  ஆனால் அதன் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. இப்போது அந்த இளைஞனுக்கு  நல்ல உள்ள படைத்த பலர் உதவ முன் வந்திருக்கின்றனர். பலர் உதவுவதால் அவரும் தனது உதவிகளைப் பரவலாகச் செய்ய முடிகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம் ஒத்த மனத்தோர் பலர் இருக்கின்றனர். யார் முன் வந்து செய்கிறார்களோ அவர்களோடு அந்த ஒத்த மனத்தோர் சேர்ந்து கொள்கின்றனர். 

அந்த இளைஞரும் தனது வியாபாரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். அல்லது நல்லபடியாக ஒரு தேனீர் கடையை வைத்து தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும். அதன் மூலம் இன்னும் பலர் பயனடைய வேண்டும். அந்த வளர்ச்சி அவருக்கும் இருக்க வேண்டும் அதே போல ஏழை மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

நல்ல மனத்தோடு எதைச் செய்தாலும் அது நல்லதாகவே நடக்கும். அதுவும் இந்த கொரோனா தொற்று நோயினால் பல குடும்பங்கள் இன்று சின்னாபின்னமாகி விட்டன.

நல்லதைச் செய்வோர் இன்னும் பெருக வேண்டும்!

No comments:

Post a Comment