விலங்குகள் கொடியவை என்று நாம் சொல்லுகிறோம்!
அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதன் விலங்குகளை விட கொடியவனாக இருக்கிறான்!
நமது வீடுகளில் விலங்குகளை என்ன பாடு படுத்துகிறார்கள். அப்படி ஒன்றும் நாம் கொடூரமான மிருகங்களை வீடுகளில் வளர்ப்பதில்லை.
நாம் வளர்ப்பதெல்லாம் நாய், பூனை - இவைகள் தாம்.
இந்த விலங்குகளை எப்படி நாம் நடுத்துகிறோம்!
சமீபத்திய செய்திகள் நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இரண்டு பூனைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கின்றன. இன்னொரு செய்தி துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து அரைக்கப்பட்டிருக்கின்றன. நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றன. நாயொன்று காரில் பின்னால் வைத்து இழுக்கப்பட்டிருக்கின்றது.
இப்படி பல செய்திகள். இந்த செய்திகளைக் கேட்கும் போது மனிதன் இந்த அளவுக்குக் கொடூரமானவனா என்று அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
நம் வீடுகளில் பூனைகளை வளர்க்கிறோம். குட்டிகள் போடுகின்றன. கடைசியில் பூனைகளையும் குட்டிகளையும் கொண்டு போய் யார் வீட்டிலோ விட்டுவிட்டு ஓடி வந்து விடுகிறோம். இல்லாவிட்டால் குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம்.
பூனைகளை, நாய்களை - அதிலும் அல்சேஷன் நாய்களை - ஆசை ஆசையாக பணம் போட்டு வாங்கி வளர்க்கிறோம். ஏதோ ஒரு காரணம் அதனை எதிர்பார்த்தபடி வளர்க்க முடியவில்லை. என்ன செய்கிறோம்? நாய்களை எங்கேயோ - காடுகளாகக் கூட இருக்கலாம் - அங்கே துரத்திவிட்டு வந்து விடுகிறோம்.
வேண்டாத பூனைகள். நாய்கள்- இவைகளுக்கு அடைக்கலம் தரும் விலங்கு நல காப்பகங்கள் இருக்கின்றன. அங்கே போய் உங்களது வேண்டாத நாய் பூனைகளை விட்டுவிட்டால் அவர்கள் அவைகளைக் கவனித்துக் கொள்வார்கள்.
நாம் எந்த நல்ல செயல்களையும் செய்ய மறுக்கிறோம். விலங்குகளுக்குக் கொடூரமான தண்டனைகளைக் கொடுக்க விரும்புகிறோம். நமது மனம் விலங்குகளை விட கொடூர மனம் கொண்டதாக இருக்கிறது.
ஆமாம், அது உண்மை தானே? சமீப காலத்தில் மனிதனின் செயல்கள் மிக மிகக் கொடூரமாக இருக்கின்றன.
ஆம்! விலங்குகளை விட கொடூரமானவர்களாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்!
No comments:
Post a Comment