Friday 7 August 2020

பழிக்குப் பழியா...?

பொதுவாக ஒரு சிலரின் மேல் நாம் தேவைக்கு அதிகமாகவே நம்பிக்கை வைக்கிறோம். அவர்கள் நல்லவர்களாக, கெட்டவர்களா என்பதெல்லாம்  நமக்குத் தெரியாது! எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!

 லிம் குவான் எங்,  பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்,  கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில், இலஞ்சம் கேட்டார் என்னும் குற்றச்சாட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதைப் படித்ததும் "ஆகா! பழிக்குப் பழியா! எங்க ஆளை மாட்டிவச்சா, உங்க ஆளை மாட்டி வைக்க மாட்டோமா!" என்று தான் முதலில் தோன்றியது!

 அரசியல்வாதிகளுக்கு இப்படியெல்லாம் ஓர் அற்ப ஆசை உண்டு என்பது நமக்குத் தெரியும்!

முடிவு எப்படி இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் பிரச்சனை அதுவல்ல! மாட்டிவிடுவது, அப்புறம் ஜாமினில் விடுவிப்பது, பேரைக் கெடுப்பது, நீங்களும் அப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது, தேர்தல் நேரத்தில் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுவது, நாங்க மட்டுமா நீங்களும் தான் என்று பெருமைப் பட்டுக் கொள்ளுவது - இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்!

அரசியலில் இருப்பவர்களுக்கு, அதுவும் நீண்ட நாள் இருப்பவர்களுக்கு, எப்படி த் திருடுவது என்று சொல்லியாக் கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு அகப்படாமல் திருடுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு! சமீப காலத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மட்டும் தான் மாட்டிக் கொண்டார்.  மற்றவர்கள் எல்லாம் இன்னும் வெளியே தானே இருக்கிறார்கள்!

இதெல்லம் இவர்களுக்கு ஒரு விளையாட்டு! 

தேர்தல் வரும் என்கிற ஆருடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போ, அப்போ, எப்போ என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  வரும் போது ஒரு பக்கம்  நஜிப்பை திருடன் என்பார்கள்! இன்னொரு பக்கம் லிம் குவான் எங்கை திருடன் என்பார்கள்! ஒரு பக்கம் ரோஸ்மாவை திருடி என்பார்கள்! இன்னொரு பக்கம் பெட்டி சியுவை திருடி என்பார்கள்! 

இது ஒரு வகை தேர்தல் ஏற்பாடு என்று தான் தோன்றுகிறது! தேர்தல் சீக்கிரம் வரும் என்று சொல்லத் தோன்றுகிறது! மணியோசை முன்னே வருகிறது!  இனி தேர்தல் வேலைகள் ஆரம்பமாகும் என நம்பலாம்!

ஒன்று மட்டும் சொல்லலாம். லிம் குவான் எங்கையோ அவரது மனைவியைப் பற்றியோ அவ்வளவு சீக்கிரத்தில் மலேசியர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட மாட்டார்கள்! இது ஒரு தேர்தல் ஏற்பாடு என்று தான் சொல்லுவார்கள்.

ஆனால் ஒன்று. நிச்சயமாக ஊழலுக்கு நாம் ஆதரவு தருவதில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே நமது நிலை. யார் ஊழல் புரிந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் நம்மால் எந்த சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் நீதிமன்றத்தில் குற்றம் நிருபிக்கப்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இது பழிக்குப் பழியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment