Wednesday 5 August 2020

அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்!

கொரோனா தொற்றிலிருந்து நாடு இன்னும் மீளவில்லை!

இப்போது இன்னும் ஒரு குற்றச்சாட்டும் உண்டு.  மலேசியர்கள் "சொன்ன சொல்லைக் கேட்பதில்லை!"  என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

அது குற்றம் தான். நமக்கே தெரிகிறது! ஆனாலும் பலவித கட்டுப்பாடுகளினால் ஏதோ வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது!

வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்களின் பிரச்சனையைப் பற்றி அரசாங்கம் கொஞ்சம் தாராளப் போக்கைக் கடைப் பிடிக்கை வேண்டும் என்பது தான் இப்போது நமது கோரிக்கை.

நாம் எப்போதுமே அஜாக்கிரதையாகத் தான் இருந்து வந்திருக்கிறோம். அதனால் தான் சிவகங்கையிலிருந்து மீண்டும் ஒரு பிரச்சனை உருவாகியிருக்கிறது.

வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்களைத் தனித்து வைக்கப் படுவது தொடர வேண்டும்.  அவரவர் வீடுகளில் அவர்களைத் தங்கவைத்து சிகிச்சைப் பெறுவது என்பது வெற்றி அளிக்கவில்லை என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்கள் தங்குவதற்குப் பல மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது கோரிக்கை. வெளி நாடுகளிலிருந்து வரும் மலேசியர்கள் பையில் பணத்தோடு வருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. கையிலிருந்ததை எல்லாம் முடித்துவிட்டு காலிப்பையோடு தான் நாட்டுக்குள் நுழைவார்கள் என்பது தான் நடைமுறை! அந்த நேரத்தில் பணம் கேட்டு அவர்களை நச்சரிப்பது முறையாகாது.

இந்த நேரத்தில்,  அவர்கள் சிகிச்சைப் பெறும் போது,  எந்த ஒரு சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்குப் பயனைத் தரும். பணம் என்று வரும் போது அத்தோடு கவலையும் சேர்ந்து கொள்ளும். சிகிச்சைப் பயனளிக்காது!

அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்  வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் நலன் தலையாயது. பணத்தைக் காரணம் காட்டி அவர்களைப் பிழிந்து எடுக்காதீர்கள்:.பணக்காரர்களுக்குப் பணம் ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் நடுத்தரக் குடும்பங்களுக்கு அது ஒரு சுமை.

பல குடும்பங்கள் இன்று வேலை இல்லாப் பிரச்சனையை எதிர் நோக்குகின்றன. இந்த நேரத்தில் அரசாங்கமும் சேர்ந்து அவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்குவது சரியல்ல என்பதே நமது வேண்டுகோள்.

நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசாங்கமே இந்த சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.

பொறுப்பு என்பது அரசாங்கத்திடமே!

No comments:

Post a Comment