Wednesday 12 August 2020

சம்பளத்தை உயர்த்தினால்....?

 இன்று வேலையில்லாமல் பல மலேசியர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அது உண்மையே!

மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றது. உள்ளுர்வாசிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் வேலையில்லாதவர் பலருக்கு வேலை கிடைக்கும். வேலையும் செய்வார்கள்.

அதில் உண்மை இருக்கிறது. சம்பளம் என்பது தான் இங்கு முக்கிய அம்சமாக உள்ளது. 

வெளிநாட்டவர்க்கு இது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் தங்கள் குடும்பத்தோடு இங்குத் தங்கி வாழவில்லை. ஆனால் நமக்கு, மலேசியர்களுக்கு, குடும்பங்கள் இருக்கின்றன. பிள்ளைகள் பள்ளி போகின்றனர் அல்லது மேற்படிப்புப் படிக்கின்றனர். தங்கி வாழ்கின்ற வீட்டுக்கு  வாடகைக் கொடுக்கின்றனர் அல்லது மாதத் தவணை கட்டுகின்றனர். வீட்டில் உள்ளவர்களுக்கு வியாதி என்றால் அதற்குப் பணம் தேவை. தினசரி வாழ்க்கை என்பதே பணத்தைச் சுற்றி சுற்றியே சுழன்றுக் கொண்டிருக்கிறது!

வெளிநாட்டவர்க்குக் குறைவான சம்பளத்தைக் கொடுப்பது போல -  சிலருக்கு அதுவும் கிடைப்பதில்லை!  - இங்குள்ளவர்களுக்கும் அப்படித்தான் செய்வோம் என்றால் ஆள் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்குத் தீர்வு காண முடியாது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் வேண்டும் என்பவர்கள் பெரும்பாலும் சம்பளத்தை அடிப்படையாக வைத்துத் தான் - அவர்களின் இலாபத்திற்காக - அவர்கள் பேசுகிறார்கள்!

நமது உணவகங்களை எடுத்துக் கொண்டால் வெளி நாட்டவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை ஓரளவு அறிந்தவன் நான்.குறைவான சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அவர்களை வேலை வாங்குவதில் மிகவும் கெட்டிக்காரர்கள்! 

முடிவெட்டும் தொழிலும் ஓரளவு அப்படித்தான்.இந்த கொரோனா தொற்று நோய் வந்த போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலனில் இந்த முதலாளிகள் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை!

இந்த நிலையில் உள்நாட்டுத் தொழிலாளார்களுக்கு இவர்களால் எப்படி வேலை கொடுக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது. வேலை கொடுப்பார்கள் ஆனால் சம்பளம் கொடுப்பார்களா?

குறைவான சம்பளமே இவர்களின் இலக்கு! அது தான் இவர்களின் பிரச்சனையும் கூட!  இந்தச் சூழலில் இவர்கள் சம்பளத்தை அதிகம் கொடுத்து இங்குள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார்கள் என்பதெல்லாம் ஏதோ கற்பனை போன்றே தோன்றுகிறது!

ஆனாலும் இதெல்லாம் சாக்குப்போக்குத் தான்! தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலை அம்போ என்று சாத்திவிட்டு ஓடிவிட மாட்டார்கள்! தொழில் செய்பவனுக்கு எத்தனையோ வழிகள் உண்டு.  ஒரு வழி போனால் இன்னொரு மாற்று வழியைக் கண்டுப் பிடிப்பவன் தான் உண்மையாகத் தொழில் செய்பவன்.  "மூடி விடுவோம்! ஓடி விடுவோம்!" என்பதும் "திருடுகிறார்கள்! மறுக்கிறார்கள்!" என்பதெல்லாம் நேற்று முளைத்த காளான்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

சீனர்கள், தொழிலில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் கூட செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள் தொழில் செய்து கொண்டு தான் இருந்தார்கள்! அவர்களை யாரும் அசைக்க முடியவில்லையே!

அதனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் மூடி விடுவோம் என்று சொல்லுபவர்களை விட இதனையும் தகர்த்தெறிவோம் என்று சொல்லுபவர்கள் தான் நமக்கு வேண்டும்! அவர்கள் தான் உண்மை வியாபாரப் பரம்பரையினர்!

உள்ளூர் மக்களின் சம்பளத்தை அதிகரியுங்கள்! பிரச்சனைகளைக் களையுங்கள்!

No comments:

Post a Comment