பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ நிக் முகமட் ஸவாவி சாலே, கிறிஸ்துவ மதத்தைப் பற்றி தான் விமர்சித்ததற்காக கிறிஸ்துவர்களிடம் தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
"நான் உண்மையைத் தான் கூறினேன். நான் எதனையும் திரித்துக் கூறவில்லை! நான் படித்தவரை அது சரி தான்! பின் ஏன் அதற்கு மன்னிப்பு?" என்று நம் மீதே வினாத் தொடுக்கிறார்!.
டத்தோ நிக் கூறுவது சரியாக இருந்தாலும் ஒரு விஷயத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
பிற மதங்களைப் பற்றி நாம் பேசும் போது, அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நாம் படிக்கும் போது அல்லது அவர் சொல்லுவது போல மது அருந்துவதை கிறிஸ்துவம் ஏற்றுக் கொள்கிறது என்றே வைத்துக் கொள்வோம் - அவர் தனது புரிதலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது. எந்த மத நூலாக இருந்தாலும் ஏதோ ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிப்பது ஆபத்தானது. மத நூல்களை விளங்கிக் கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.
மத நூல்களைப் புரிந்து கொள்ள அந்தந்த மத அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். புனித நூல்கள் என்பது நிக் போன்றவர்களால் எழுதப்பட்டவை அல்ல! இறைவனின் அருள் இல்லாமல் எந்த புனித நூல்களையும் எழுத முடியாது என்கின்றன வேதங்கள். இஸ்லாமும் அதில் அடங்கும்.
இறை அருளால் எழுதப்பட்ட நூல்கள் எப்படித் தவறான வழியைக் காட்ட முடியும்? அதைத்தான் நிக் முகமட் புரிந்து கொள்ள வேண்டும். நான் கூட "திருக்குரான்" படித்துவிட்டு உடனே விளக்கம் சொல்ல முடியுமா? என்னால் படிக்க முடியும் என்பது உண்மை தான்! ஆனால் என் புரிதல் என்பது முட்டாள்தனமாகத்தான் இருக்கும்! ஒரே மூச்சில் படித்துவிட்டு அல்லது சில வரிகளைப் படித்துவிட்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? புனித நூல்களை அப்படியெல்லாம் நாம் விரும்பியவாறு புரிந்து கொள்ள இயலாது!
நான் எத்தனையோ ஆண்டுகளாக புனித நூலான பைபிளை படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய புதிய அர்த்தத்தை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. வயது ஏற ஏற எனது புரிதலும் மாறிக் கொண்டிருக்கிறது! என் அளவு நிக் முகமட் பைபிளை படித்திருப்பார் என நான் நம்பவில்லை! அது அவருக்குத் தேவையும் இல்லை!
ஆனால் ஏதோ ஓரிரு முறை அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளைப் படித்துவிட்டு அல்லது குறிப்பிட்ட சில வரிகளைப் படித்துவிட்டு "பைபிள் இப்படித்தான் சொல்லுகிறது" என்று ஒரு முடிவுக்கு வருவது அவர் தகுதிக்கு ஏற்றதல்ல!
அவர் தகுதி என்ன? அவர் ஓர் அரசியல்வாதி. அவ்வளவு தான்! அரசியல்வாதி என்பதாலேயே அவர் ஓரு சமய அறிஞராக மாறி விட முடியாது! அவர் கிறிஸ்துவ சமய அறிஞர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை!
மதங்களை வைத்து மக்களைப் பிரித்து வைப்பது பாஸ் கட்சியினருக்கு வழக்கமாக ஒன்றாகிவிட்டது! அவர்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத போது மதங்களை வைத்து அரசியல் செய்கின்றனர்!
நாம் பாஸ் கட்சியினருக்குச் சொல்ல வருவதெல்லாம் "பா யோடு நில்லுங்கள்!" என்பது தான்!
கிறிஸ்துவம் அன்பைப் போதிக்கின்ற மதம்! வம்பைப் போதிப்பது அல்ல!
உலகில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. ஆனால் உங்கள் நிலை? நாட்டுக்குத் தகுந்த மாதிரி மாறும்!
நான் உங்களை மன்னிக்கிறேன்!
No comments:
Post a Comment