Tuesday 18 August 2020

பாக்கிஸ்தானில் தமிழர்களா?

 பாக்கிஸ்தானில் தமிழர்களா! ஆச்சரியக்குறியைப் போட வேண்டுமா அல்லது கேள்விக்குறியைப் போட வேண்டுமா என்பது புரியவில்லை!

பாக்கிஸ்தானில் தமிழர்கள் வசிப்பார்கள்  என்பதை எந்தக் காலத்திலும் நினைத்துப் பார்த்ததில்லை! அப்படி ஒர் எண்ணமே மனதில் ஏற்பட்டதில்லை!

சமீபத்தில்  பி.பி.சி. தமிழ் இணையத்தளத்தில் வந்த செய்தியைப் படித்த போது அது ஒரு அதிர்ச்சி செய்தியாகவே  இருந்தது!

என்ன பாக்கிஸ்தானிலா?  அந்நாட்டைப் பற்றி நாம் அறிந்தது தான். மற்ற இனத்தவரை அவர்கள் வாழவிட்டாலும் மற்ற மதத்தினரை அவர்கள் வாழவிட மாட்டார்களே! என்பது தான் முதல் அதிர்ச்சி!

சான்றாக ஒன்றைச் சொல்லலாம்.  இந்திய பஞ்சாபியர்கள் அங்கு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சீக்கிய கோயில்களுக்கு அடிக்கடி இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன! அதே போல அவர்களுக்கும் ஏற்படத்தான் செய்கின்றன.  இன்னொன்று,  அங்கு கிறிஸ்துவ மதத்தினரும் இருக்கின்றனர். கிறிஸ்துவ மதத்தினருக்கும் அவர்களுடைய தேவாலயங்களுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன! ஒரு கிறிஸ்துவ பாக்கிஸ்தானிய அமைச்சர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதெல்லாம் பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மை சமூகத்தினர் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தாம் என்பது நமக்கும் தெரியும்.

 தமிழர்களின் நிலைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் இவர்களில் பெரும்பாலும்  பாக்கிஸ்தான் தலைநகரான கராச்சியில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலோர் பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் மும்பை மற்ற இந்திய தலை நகரங்களுக்கு வேலை தேடி போனவர்கள் அப்படியே கராச்சி பக்கமும் வேலை தேடிப் போயிருக்கிறார்கள்.  அங்கேயே குடியமர்ந்து விட்டார்கள் என்பது தான் இவர்களின் கதைச் சுருக்க,ம்!

 

இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்கிற அவர்களின் அடையாளத்தை விடவில்லை!  கராச்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தான் தமிழர்களை ஒன்று கூடும் இடமாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பொங்கல், ஆடிமாதம், தைப்பூசம் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காவடி எடுத்தல், அலகுக் குத்துதல் அனைத்தும் உண்டு. தமிழர்களின் பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப் பிடிக்கப்படுகின்றன. 

ஆனால் தமிழ் மொழி பள்ளிகளில் பாடமாக இல்லை. ஏதோ ஓரளவு தமிழ் அறிந்தவர்களால் மாரியம்மன் கோயிலில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.   ஆனால் தமிழ் மொழியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடையே இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். இப்போது அவர்களிடையே படித்தவர்கள் ஓரளவு இருப்பதனால் மொழி தொடர்ந்து காக்கப்படும் என நம்புவோம்.

இன்றைய தமிழக அரசியல்வாதிகள் மனம் வைத்தால் நல்லது நடக்கும். அல்லது உலகத் தமிழர்கள் மனம் வைத்தால் நல்லது நடக்கலாம். தமிழ் மொழி காக்கப்பட வேண்டும். நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். 

எல்லாமே நமது கைகளில் தாம். பாக்கிஸ்தானில் வாழும் தமிழர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்

No comments:

Post a Comment