Wednesday 19 August 2020

களம் இறங்குகின்றனர் கிராமத் தலைவர்கள்!

 இதோ! இப்போது தான் படித்த ஒரு செய்தி மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது!

நாடற்றவர்கள் பிரச்சனை.  அதனைத் தீர்க்க கிராமத் தலைவர்கள் களம் இறங்குகின்றனர்.  இது சிலாங்கூர் மாநிலத்தில்.

இந்த கிராமத் தலைவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா அல்லது வெற்றி பெறவில்லையா என்பதல்ல முக்கியம். அவர்கள் ஒரு முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பது தான் முக்கியம். வெற்றி என்பதே தொடர் முயற்சி தானே! அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்!

இங்கு நான் பேச வருவது சிலாங்கூரைப் போலவே நெகிரி செம்பிலானும் எதிர்கட்சி ஆட்சியில் இருக்கின்ற ஒரு மாநிலம். இங்கும் நாடற்றவர்கள் நிறையவே இருக்க வேண்டும்.  என்னிடம் அதற்கான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் கணிசமான அளவு இந்தியர்கள் குடியுரிமை  அற்று இருக்கின்றனர்.

நிச்சயமாக இங்குள்ள கிராமத் தலைவர்கள் அந்த புள்ளிவிபரங்களை வைத்திருப்பர். அப்படி வைத்திருக்கவில்லை என்றால் அவர்கள் கிராமத் தலைவர்கள் இல்லை, கிராமப் பொம்மைகள், அவ்வளவு தான்!

இந்த குடியுரிமைப் பிரச்சனையில் யாரோ நம்மைத் தேடிக்கொண்டு வருவார்கள் என்கிற மனப்போக்கு நமது தலைவர்களுக்கு ஏற்படக் கூடாது! தலைவர்கள் தான் அவர்களைத் தேடிப் போக வேண்டும். தேடிக்கொண்டு வருபவர்கள் ஒரு சிறுபான்மையனர் தான். அவர்களிடம் அந்த முயற்சி என்பது எப்போதும் இருக்கும். ஆனால் பெரும்பான்மையினருக்கு அந்த முயற்சி என்பதே இருப்பதில்லை! அலட்சியம் அதிகம்! அதனால் அவஸ்தையும் அதிகம்!

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் கிராமத் தலைவர்கள் களம் இறங்க வேண்டும்.  ஆம்! சும்மா அரைகுறை மனத்தோடு அல்ல! இதனை ஒரு வேள்வியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டும். அதிக அக்கறை வேண்டும். அதிக ஈடுபாடு வேண்டும்.

ஒவ்வொரு கிராமத் தலைவரும் தனது கிராமத்தில் உள்ள குடியுரிமை அற்றவர்களின் புள்ளிவிபரங்களை அவசியம் வைத்திருக்க வேண்டும். அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். அந்தப் பிரச்சனைகளைத் தலை போகிற காரியமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தைப் போல அனைத்து மாநிலங்களிலும் கிராமத் தலைவர்கள் இந்த குடியுரிமைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்க வேண்டும்.

எதிர்கட்சியின் ஆட்சியில் உள்ள குடியுரிமை இல்லாதவர்களைப் பற்றி பேசுவதைப் போல ஆளுங்கட்சியில் உள்ள மாநிலங்களைப் பற்றி பேச நமக்கு உரிமையில்லை. இங்கு ஆளுங்கட்சி என்பது பாரிசான் கட்சியைத்தான் குறிப்பிடுகிறேன். இங்குள்ள கிராமத் தலைவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்பதாக உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். இது நடந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டன! அவர்களை நம்புவதால் எந்த ஒரு அணுவும் அசையப்போவதில்லை!

சிலாங்கூர் மாநில கிராமத் தலைவர்களே!   உங்களை நான் வாழ்த்துகிறேன். உங்களுடைய அறிக்கை வெறும் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது.  நீங்கள் செய்த சாதனைகள் மக்களால் போற்றப்பட வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும்.

 கிராமத் தலைவர்களே வாழ்த்துகள்!

No comments:

Post a Comment