தேசிய முன்னணியைச் சேர்ந்த இந்தியர் சார்ந்த கட்சிகள் தங்களது வாக்காளர்களை அடையாளம் காண வேண்டும் என்று ஐ.பி.எப். கட்சி அறைகூவல் விடுத்திருப்பது சரியான நோக்கம் தான், தவறு என்று சொல்லிவிட முடியாது!
அதுவும் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் தேர்தலின் மீது அக்கறை காட்டுவது போல இந்திய வாக்காளர்கள் மீதும் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.
பொதுவாக ஐ.பி.எப். கட்சியின் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை! அவர்களுக்கு ஏதோ ஒரு செனட்டர் பதவி கிடைக்கலாம். கிடைத்துவிட்டுப் போகட்டும். ஏதோ ஒரு தமிழனுக்கு அந்தப் பதவி கிடைத்ததே என்பதோடு சரி.
மற்றபடி இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதும் எனக்குத் தெரியும்! ஆனானப்பட்ட ம.இ.கா. வே மண்ணோடு மண்ணாகிவிட்ட பிறகு இவர்களால் என்ன செய்த விட முடியும்?
ஆனாலும் இவர்களுக்குச் சொல்ல வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இந்திய வாக்களர்களுக்கு மலிவான அரிசியை வாங்கிக் கொடுக்காதீர்கள். மீன் டின்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.சாராயத்தை வாங்கிக் கொடுக்காதீர்கள். இன்னும் என்ன என்ன கொடுக்க வேண்டும் என்று நினைக்கீறீர்களோ அவைகளை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
அப்படியே பற்றும் பாசத்தையும் இந்திய வாக்களர்களுக்குக் காட்ட வேண்டுமானால் அவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுங்கள். நிலம் வாங்கிக் கொடுங்கள். ஆனால் அவர்கள் பெயரில் வாங்கிக் கொடுங்கள், உங்கள் பெயரில் அல்ல!
ஆனால் இவைகள் அனைத்தும் தேர்தலுக்கு முன்பே கொடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் என்றால் மறந்து போய் விடுவீர்கள்! உங்களுக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாக இருக்கும்!
இது உங்களுக்கு மட்டும் அல்ல, இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா.வுக்கும் சேர்த்துத் தான். கடந்த அறுபது ஆண்டுகளாக கிழிக்காததை இனி மேலா கிழிக்கப் போகிறார்கள்?
நீங்கள் சரியான வழியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதில் தவறில்லை. ஆனால் சரியான நோக்கத்தோடு செயல்படுங்கள். இந்திய வாக்களர்களை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கம் மட்டும் வேண்டாம்!
வெற்றி பெற வாழ்த்துகள்!
No comments:
Post a Comment