Thursday 6 August 2020

இந்திய (தமிழ்) ஆய்வியல் துறை என்றால் என்ன?

மலாயா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வியல் துறையைப் பற்றி பேச எனக்கு எந்த அருகதையும் இல்லை.

காரணம் அந்தத்  துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாதவன். அதனால் அதனைப் பற்றி அதிகம் அறியாதவன்.

முன்பு ஒரு சமயத்தில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வீராவேசமாக பகிரப்பட்டது இப்போது எனது ஞாபத்திற்கு வருகிறது.

இந்திய ஆய்வியல் துறை, தமிழ் ஆய்வியல் துறையென பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதாக பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்; எழுதியிருந்தனர். இப்படியும் அப்படியும் எழுதியிருந்தனர்!   அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை! அத்தோடு அந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது!

ஆனாலும் இந்தப் பெயரில் ஒரு சிக்கல் இன்னும் உள்ளது என்பது தான் உண்மை.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்திற்கும் இந்தி மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். சமஸ்கிருதம் என்பது இந்தியாவில் சுமார் 45,000 பேர் பேசுகின்ற ஒரு மொழி என்கின்றனர். அந்த 45,000 பேர் பேசுகின்ற ஒரு மொழியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் கற்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து சமஸ்கிருத மொழியைப் பரப்பி வருகிறார்.  வேறு எந்த ஒரு மொழிக்கும்  இந்த அளவுக்குப் பணம் செலவிடப்படவில்லை! யாரும் பேசாத ஒரு மொழிக்காக, எழுத்துருவில் யாரும் அதிகமாகப் பயன்படுத்தாத ஒரு மொழிக்காக பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறார்! அத்தோடு இந்தி மொழி! மற்ற மாநில  மொழிகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை!

இந்தச் சூழலில் நாம் பார்க்கும் போது நமது நாட்டிலும் எதுவும் நடக்கலாம். பிரதமர் மோடி தெய்வீக மொழிக்கும், அவரது தேசிய மொழிக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளவர். பணத்தை வாரி இறைப்பவர். பணத்தை வைத்துக் காரியங்களைச் சாதிப்பவர்! பணத்துக்கு மயங்காதவர் யார்?

அதனால் இந்திய ஆய்வியல் என்று வரும் போது பிற்காலத்தில் ஏதேனும் திணிப்புக்கள் வருமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.

அதனால் அதனை ஏன் "இந்திய (தமிழ்) ஆய்வியல் துறை" என்று மாற்றம் செய்யக் கூடாது? இதில் சிக்கல்கள் உண்டா என்பது எனக்குத் தெரியாது! இதனைப் பல்கலைக்கழக அறிஞர் பெருமக்களிடமே விட்டுவிடுகிறேன். அரசியல்வாதிகளே எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களிடமும் இதனை விட்டுவிடுகிறேன். அத்தோடு தமிழ் வளர்ச்சிக்காக தே.நில நிதி கூட்டுறவு சஙத் தலைவர் டான்ஸ்ரீ கே.சோமசுந்தரம் அவர்களின் பங்கும் அளப்பரியது. அவர்களிடமும் இதனை விட்டுவிடுகிறேன்.

நல்லது நடந்தால் சரி. இப்போது அசட்டையாக இருந்தால் வருங்காலங்களில் ஏதேனும் நடக்கலாம்.

சிந்தித்துச் செயல்படுவோம்!

No comments:

Post a Comment