Saturday 8 August 2020

ஆட்சி கவிழ்ப்பு தொடர வேண்டுமா?

 இன்று மாநில அள்விலும் சரி தேசிய அளவிலும் சரி ஆட்சி கவிழ்ப்பு என்பது சாதாரண விஷயமாகி விட்டது!

அரசியல்வாதிகளுக்கு இது சாதாரண விஷயம்.  கட்சி விட்டு கட்சி மாறுவது என்பது சாதாரண விஷயமாக இருந்தாலும் இங்கு பல கோடி வெள்ளிகள் கைமாறுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது. 

இங்குப் பணமே இந்தக் கவிழ்ப்புக்கும், தாவலுக்கும் காரணமாக அமைகிறது! 

தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் போட்டியிடும் கட்சியின் கொள்கைகள் என்ன என்று ஒரு அரசியல்வாதிக்கும் தெரிவதில்லை. கொள்கை என்ன என்பது தெரியாததால் நேரம் காலம் வரும் போது அப்படியே தங்களை வேறு கட்சிக்கு மாற்றிக் கொள்கின்றனர்! 

சமீபத்தில் டாக்டர் மகாதிர் ஒரு கருத்தைச் சொன்னார். பதினான்காவது பொதுத் தேர்தலில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், அதனை மறந்து, இப்போது ஊழலோடு சேர்ந்து கொண்டனர் என்றார்!

அது தானே உண்மை! அப்படி ஊழலோடு சேர்ந்து கொண்டதால் தானே இப்போது மக்கள் பல வழிகளிலே துன்பத்தை அனுபவிக்கின்றனர்! 

நிலையான ஓர் அரசாங்கம் இல்லாமல் இப்போது "தடி எடுத்தவனெல்லாம் தண்டல்" என்கிற நிலைமை நாட்டில் உருவாகிவிட்டதே! 

எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று அல்லும் பகலும் அயராது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களே! என்ன சொல்வது?

மக்களிடம் கொள்ளையடித்த பணம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. அதனை இப்போது பயன்படுத்துகிறார்கள். இப்போது வாரி இறைத்தால் தான் அடுத்த ஆட்சி அவர்களுடையதாக இருக்கும் போது மீண்டும் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கலாம்!

திட்டம் போட்டுத் தான் திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது! ஆட்சி,  பட்டம், பதவி அனைத்தும் மக்களிடமிருந்து தான் திருடுகின்றனர்.

நம்மால் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஒன்று செய்ய முடியவில்லை. நாம் எதைச் சொன்னாலும் உடனே இனம், சமயம் உள்ளே புகுந்து விடுகிறது!

ஆட்சியைப் பிடிக்க சமையத்தைப் பயன்படுத்திகிறவன் சர்வ முட்டாள் என்று தெரிந்து என்ன ஆகப் போகிறது? சமயத்தையும் ஊழலாகப் பயன்படுத்துகிறானே, என்ன செய்ய முடியும்?

மக்கள் திருந்த வேண்டும். அப்போது தான் அரசியல்வாதி திருந்துவான்.இல்லாவிட்டால் ஒரு நிலையில்லாத அரசாங்கத்தைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!

ஆட்சிக் கவிழ்ப்பு தொடரக் கூடாது என்பது தான் நமது நிலை.ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு கட்சி ஆட்சியாகத் தான் இருக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ ஒரு நிலையான ஆட்சி நமக்குத் தேவை.

நமக்குத் தான் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மாற்றும் சக்தி இருக்கிறதே!

ஓட்டு இருக்கும் போது ஏன் ஒட்டுப் போட்ட ஆட்சி? 

No comments:

Post a Comment