பெண்மணி ஒருவர் தனது குழந்தையின் பிறப்புப் பத்திரத்தை நகல் எடுப்பதைப் பார்த்தேன்.
அந்த குழந்தையின் பெயரைப் பார்த்த போது அது தமிழ்ப் பெயராகத் தெரியவில்லை! நான் வாழும் பகுதியில் மலையாளிகள், தெலுங்கர்கள், ஓடியா இனத்தவர் - இப்படி பல இந்திய இனத்தவர்கள் வாழ்கின்றனர். எனக்கு அவர்களின் பெயர்களில் ஓரளவு பரிச்சையும் உண்டு.
ஆனால் இந்தப் பெண் தமிழ்ப்பெண். கணவரும் தமிழர் தான். நான் அந்தப் பெண்ணிடம் அவரது குழந்தையின் பெயர் ஏன் இப்படிக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று கேட்டேன்.
அதற்கு அவர் "கோயில் பூசாரி இந்த எழுத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னாருங்க!" என்றார்!
நமக்கு அதில் ஒன்றும் ஆட்சேபனையில்லை. மனிதர் மேல் நம்பிக்கை வைப்பதை விட கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது மேலானது. அதனை நான் ஆதரிக்கிறேன்.
ஆனால் ஒரு தமிழ்ப் பெயர் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் என்னன்னவோ எழுத்துக்களைக் கொடுத்து "இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்" என்று சொல்லுகிறார்களே அதுதான் நமக்கு எரிச்சலை ஊட்டுகிறது. பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்?
நான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்படி கோயில் பூசாரிகளால் கொடுக்கப்படும் பெயர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இப்படிப் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாம் என்ன பெரிதாகச் சாதித்து விட்டோம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை!
பொருளாதாரத் துறையில் வளர்ந்து விட்டோமா? கல்வித் துறையில் வளர்ந்து விட்டோமா? பெரிய பெரிய பதவிகள் வகிக்கிறோமா? எதுவும் இல்லை! வழக்கம் போல் ஏமாற்றப்படுகிறோம்! நிறைய குடிகாரர்களை உருவாக்கியிருக்கிறோம்! குண்டர் கும்பல்கள் அதிகரித்து விட்டன! அடிதடி சண்டை குறையவில்லை! நாளிதழ்களில் நமது இளைஞர்கள் தான் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்! சிறைகளை நாம் தான் குத்தகை எடுத்திருக்கிறோம்!
சாமி பெயர்களை வைத்த காலத்தில் கூட நாம் நன்றாகத்தான் வாழ்ந்திருக்கிறோம். நடிகர்களின் பெயர்களை வைத்த காலத்தில் கூட நாம் நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறோம். இப்போது? ,,,,........சொல்வதற்கில்லை! வளர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு வீழ்ச்சியும் வந்திருக்கிறது!
பூசாரிகள் கொடுக்கின்ற எழுத்துக்களை வைத்தே, தக்கவர்களிடம் போனால், நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்க முடியும்.
எப்பாடுப்பட்டாலும் உங்களுடைய அடையாளத்தை இழந்து விடாதீர்கள்! மற்றவர்கள் அடையாளம் நமக்கு வேண்டாம்
No comments:
Post a Comment