Saturday 29 August 2020

வெற்றி யாருக்கு?

 "எந்த நேரத்திலும்!"  என்று எதிர்பார்க்கப்படும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தேர்தல் தொகுதி என்று எடுத்துக் கொண்டால் அது எதுவாக இருக்கும்? 

                                        அன்வார் இப்ராகிம் மூத்த மகள் நூருல் இஸாவும் நடப்பு அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியும் போட்டியிடப் போகின்ற தொகுதி தான் மிக மிக சுவராஸ்யமான தொகுதியாக  இப்போது மக்களால் பேசப்படுகின்ற தொகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது     
                                        

இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். வருகின்ற பொதுத் தேர்தலிலும் போட்டியிட இருப்பவர்கள்.

இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு யாருக்குப் பிரகாசமாக இருக்கும்?

பொதுவாக நூருல் இஸாவுக்கு மக்களிடையே ஒரு செல்வாக்குண்டு. ஓர் இளமையான அரசியல்வாதி மட்டும் அல்ல. அவர் எல்லா இனத்தாரிடையேயும் மிகவும் இயல்பாக பழகக் கூடியவர். தந்தையைப் போலவே நியாயம் பேசுபவர்.  அவர் நல்லவர் என்கிற அடையாளம் எப்போதுமே அவருக்கு உண்டு. உண்மையைப் பேசும் அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.  மக்களிடைய ஓர் ஈர்ப்பு அவருக்கு உண்டு.

எந்தத் தொகுதியில் அவர் நின்றாலும் அவரால் வெற்றி பெற முடியும் என்கிற அபிப்பிராயம் பொது மக்களிடமும் உண்டு.

அஸ்மின் அலி - வேறு மாதிரியான குணாதிசயம் கொண்டவர். அவருடைய முந்தைய சரித்திரத்தை நாம் ஆராய வேண்டாம். சமீபத்திய சரித்திரம் அவருக்குப் பாதகமாக இருப்பது ஒன்றே போதும். அவர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார்!

சுமுகமாக போய்க் கொண்டிருந்த அரசாங்கத்தை கவிழ்த்தவர் என்கிற பெயரோடு இப்போது ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார்! இது வரை இப்படி ஒரு நிகழ்வு நாட்டில் நடந்ததில்லை. தான் பிரதமர் ஆக வேண்டும் என்னும் வெறியில் அரசாங்கத்தையே கவிழ்த்த ஒரு மனிதருக்கு மக்களிடையே  என்ன மரியாதை இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்!  நாடு பெரிதா தனி மனிதன் பெரிதா!

அவருக்கென்று ஒரு சில இடங்களில் ஆதரவு இருக்கலாம். அவருடைய தொகுதிக்கு அவர் வேண்டப்பட்டவராக இருக்கலாம். எத்தனையோ "லாம்!லாம்"  இருந்தாலும் அவர் செய்த இந்த கவிழ்ப்பு வேலை எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத செயலாம்!

துரோகத்திற்கு முன்னுதாரணம் அஸ்மின் அலி!   ஏத்தனையோ ஊழல்வாதிகளை நாம் பார்த்திருக்கிறோம்.  அவர்களையெல்லாம் நாம் மன்னித்துவிட்டோம். ஒரு சிலரை நம்மால் மன்னிக்க முடியவில்லை. அதன் பலன் அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விட்டோம்! 

ஆனால் அஸ்மின் அலி அப்படியா? அவர் செய்தது மாபெரும் துரோகம் அல்லவா! ஐந்து ஆண்டு காலத்தைக் கடக்க வேண்டிய அரசாங்கத்தை இரண்டு ஆண்டுகளில் மூட்டைக்கட்ட வைத்து விட்டாரே!

இப்போது அடுத்த தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதே!  அதற்கான செலவுகள் எத்தனை எத்தனை கோடி! நினைத்தாலே வயிறு எரிகிறது அல்லவா!  அது மக்கள் பணம் அல்லவா! மக்களின் நலனுக்குச் செலவு செய்ய வேண்டிய பணம் இப்படி விழலுக்கு இறைத்த நீராக அல்லவா போய்விட்டது!

ஆக வெற்றி யாருக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

நானும் அதையே தான் நினைக்கிறேன்!

 

No comments:

Post a Comment