Friday 28 August 2020

புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்கள்!

 பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைப் பற்றித் தெரியாதவர் யாரும் இல்லை!

அவர் பல மொழிகளில் பாடியிருந்தாலும் தமிழில் கொஞ்சம் அதிகமாகவே பாடியவர் என்று சொல்லலாம்.  

அவர் கொரோனா தொற்றிலிருந்து நலம் பெற பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள்.  ஒரு பொதுப் பிரார்த்தனையும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. உலகளவிலும்  அதே நேரத்தில் அவ்ருக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை முன்னெடுத்தவர்கள் இளையராஜா, பாரதிராஜா போன்றவர்கள். அனைத்தும் சரி.

நேற்றிரவு  எஸ்.பி.பாலாவின் மகன் எஸ்.பி.பி. சரண் தொலைக்காட்சியில் தோன்றி தனது தந்தை உடல் நிலை தேறி வருவதாகவும் அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எல்லாம் சரி.

ஆனால் ஒரு விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அறிவிப்பை அவர் ஏன் ஆங்கிலத்தில் செய்தார் என்பது தான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

பாலாவின் நலனுக்காக யார் பிரார்த்தனை செய்தார்கள்? பெரும்பாலோர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள்.  உலகளவில் அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.  இந்தியாவில் ஒரளவு அவரை அறிந்தவர்கள், அவருடைய அபிமானிகள்,   அவருக்காகப் பிரார்த்தனை செய்திருக்கலாம். அதிலே ஆந்திராவும் அடங்கும். ஆந்திராவில் தமிழ் நாட்டைப் போல பெரிய அளவில் செய்யக் கூடிய வாய்ப்பில்லை. கர்நாடக மாநிலத்திலும் வாய்ப்பில்லை. கேரள மாநிலத்திலும் வாய்ப்பில்லை.

ஆக, தமிழ் நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி தமிழர்களே பாலாவின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். தமிழ் நாட்டில்,  கிராமப்புறங்களில் உள்ள, மூலைமுடுக்குகளில் உள்ள  தமிழர்கள்,  அவருக்காகப் பிரார்த்தனைச் செய்தார்கள்.

பாலா தெலுங்கர் என்றாலும் தமிழர்களே அவரின் நலனுக்காக அதிகமாக பிரார்த்தனைச் செய்தவர்கள்.  அது தமிழர்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசம், பரிவு, அன்பு என்று சொல்லலாம். தமிழர்கள் அவரைத் தங்களில் ஒருவர் என்று தான் நினைக்கிறார்கள்.

ஆனால் அவரது மகன் எஸ்.பி.பி.சரண்,   அந்த அன்புள்ளம் கொண்ட தமிழர்களை,  எட்டி உதைத்து உதாசீனப் படுத்தி விட்டார் என்று தாராளமாகச் சொல்லலாம்.  சரணுக்குத் தமிழ் தெரியவில்லை என்பதால் அவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால் கிராமப்புறங்களில், மூலைமுடுக்ககளில் உள்ள பாலாவின் அபிமானிகளுக்கும் அவரது செய்தி போய்ச் சேர்ந்திருக்க வேண்டுமென்றால் அவர் தமிழில் பேசியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள் இன்னும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறியாத அளவுக்கு சரண் விவரம் தெரியாதவரா? உலகளவில் வாழும் தமிழர்கள் தமிழ் அறியாதவர்களா? தமிழ் தெரியாதவர்கள் என்றால், தமிழை அறியாதவர்கள் என்றால் எஸ்.பி.பாலாவை அறிந்திருக்க முடியாதே!

எஸ்.பி.பாலா, கொரோனா தொற்றுக்கு முன்னர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒரு தெலுங்கு இசை நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. அதனை நாம் குறையாகச் சொல்லவில்லை.  ஒரு பாடகருக்குப் பாடுகின்ற வேலை தான். எந்த மொழி என்பது முக்கியம் அல்ல. 

அவர் இப்போது உடல் நலம் தேறி வருவதில் நமக்கு மகிழ்ச்சியே.  மருத்துவமனையிலிருந்து அவர் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று  மீண்டும் பிரார்த்திக்கிறோம்.

மனதிலே ஒரு நெருடல். அதனை இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தான்!

No comments:

Post a Comment