Friday 7 August 2020

புதிய கட்சியைச் தொடங்கினார் மகாதிர்!

 கேட்பதற்குக் கொஞ்சம் அதிசயமாக இருக்கும். ஆனால் அது உண்மை!

டாக்டர் மகாதிர் தனது 95-வது வயதில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்! ஏன் தொடங்கக் கூடாது? அவருக்கு ஆதரவு உண்டு என்று அவர் நினைக்கிறார். வயதைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்?

ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்.

மலேசியர் என்பது போய் மலாய்க்காரர் என்று கொஞ்சம் கீழே இறங்கி வந்திருக்கிறார். இருந்தாலும் பரவாயில்லை.  காரணம் 1969 களிலே இருந்த அந்த வேகம் இப்போது அவருக்கு வந்திருக்கிறது.

 அப்போது மலாய்க்காரர்களின் முன்னேற்றம் என்பது அவரது கொள்கையாக இருந்தது.  மலாய்க்காரர்களின் பொருளாதார முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம் இன்னும் அவர்கள் பின் தங்கிய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் தான் அவரது போராட்டமாக இருந்தது. அதில் அவர் வெற்றியும் கண்டார். 

இப்பொழுதோ கொஞ்சம் தலைகீழ் மாற்றம்! ஐம்பது ஆண்டுகள் கழித்து பொருளாதார முன்னேற்றத்தில் ஊழலும் சேர்ந்து கொண்டது! இப்போது ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது!

மலாய்க்காரர்களின் நலனுக்காகவே இப்புதிய கட்சி ஆரம்பிக்கப் படுகிறது. கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.  கட்சியின் தலைவராக டாக்டர் மகாதிரின் மகன் முக்ரிஸ் மகாதிர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இப்போதைக்கு அக்கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராது எனினும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமை மாறலாம்.

 டாக்டர் மகாதிரின் இந்தப் புதிய கட்சி மலாய்க்காரரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புவோம்!

கால மாற்றத்தைக் கண்டீர்களா?  ஒரு காலத்தில் மலாய்க்காரர்கள் முன்னேறவே இல்லை என்கிற ஒரு போராட்டம் அவரால் தொடங்கப்பட்டது.  இப்பொழுதோ முன்னேறி விட்டார்கள் ஆனால் ஊழலிலும் சேர்த்து முன்னேறி விட்டார்கள் என்கிற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது! இப்போது இதற்காகவும் ஒரு கட்சி தொடங்கி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது!

மனிதனின் பேராசை எங்கே கொண்டு போய் விடும்? யாரிடமும் பதிலில்லை!

No comments:

Post a Comment