Friday 7 August 2020

விட்டுக் கொடுத்து வாழ்வோம்!

 நம் மக்கள் செய்கின்ற ஒரு சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன.

அறியாமல் செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று பார்த்தால் எல்லாம் தெரிகிறது ஆனால் அவனை மன்னிக்கக் கூடாது!  இப்படித்தான் நாம் நினைக்கிறோம்.

பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தி மனதை வெகுவாகப் பாதிக்கிறது. 

இந்திய உணவகங்கள் இன்று பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. பாவம்!  வேலையாள்கள் பற்றாக்குறை. அரசாங்கம் அவர்களைச் சட்டை செய்யவில்லை. பல உணவகங்கள் மூடப்படுகின்றன. குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகங்கள் ஏதோ ஓடுகின்றன என்று சொல்லலாம்.

இந்த நேரத்தில் ஓர் உணவகத்தைப் பற்றி தவறான தகவல்களை மக்களுக்குப் பரப்பி அந்த உணவகத்துக்கு மக்கள் போகாதபடி செய்வது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அப்படித்தான் நடந்திருக்கிறது, கெடா, சுங்கைப்பட்டாணி  என்னும் நகரில். அந்த உணவகத்தின் உரிமையாளரையோ அல்லது அங்கு வேலை செய்பவர்களையோ நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அது முற்றிலும் நமது சொந்தப் பிரச்சனை.

சொந்தப் பிரச்சனையை மற்ற பிரச்சனைகளோடு கலப்பது சரியான அணுகுமுறை அல்ல. அந்த உணவகத்தில் கொரோனா தொற்று இருப்பதாக வெளியே போய் நாலு பேரிடம் சொன்னால் அது அந்த உணவகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்திற்குப் போக மாட்டர்கள்! ஏன்? அது நமக்கே தெரியும்! நாமும் போக மாட்டோம்!

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உண்மையில்  மிகவும் கேவலமானது.

இந்த கொரோனா தொற்று நோயினால் உலகமே ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. நமது நாட்டிலும் அப்படித்தான்.  பல தொழில்கள், வியாபார நிலையங்கள் அனைத்தும் நொண்டி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன! மக்கள் வேலை இழந்து சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

இந்த நேரத்தில் அவதூறுகளைப் பரப்புவது  ஏற்கத்தக்கது அல்ல. அது ஒருவனின் சோற்றில் மண்ணை வாரி இறைப்பதுற்குச் சமம். 

வேண்டாம்! நமக்குள் பிரிவினைகள் வேண்டாம்! ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வோம்! பகைமையை வளர்க்க வேண்டாம்!

நமது பிழைப்பில் நாம் கவனம் செலுத்துவோம். நமக்கும் நான்கு பேர் உதவி வேண்டும். அந்த நான்கு பேருக்கும் நமது உதவி வேண்டும்.

விட்டுக் கொடுத்து வாழ்வோம்!

No comments:

Post a Comment