Thursday 27 August 2020

ம.இ.கா. திருந்தி விட்டதா?

 ம.இ.கா. திருந்திவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் சிலிம் இடைத் தேர்தலில் பேசுகின்ற பேச்சுக்கள் நமக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன!

அவர்கள் அப்படியெல்லாம் திருந்தி விட மாட்டார்கள் என்று நிச்சயமாக நாம் நம்பலாம்!

கடந்த கால தவறுகளை மன்னியுங்கள் என்று சொன்னாலும் கடந்து கால தவறுகளையே மன்னிக்க முடியாத போது நிகழ் கால தவறுகளையும் சேர்த்து எப்படி மன்னிப்பது என்பது தான் நமக்குப் புரியவில்லை!

ஏற்கனவே தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த நிலத்தை முழுமையாக பள்ளிக்குக் கொடுக்காமல் அதனில் பாதியை தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்! அதனையே இன்னும் மன்னிக்கவில்லை! அதற்குள் 2000 ஏக்கர் நிலத்தை - தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை - அதனையும் அவர்கள் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்! கல்விக்காக கொடுக்கப்பட்ட நிலத்தையே கபளீகரம் செய்த இவர்களை எப்படி மன்னிப்பது?  இவர்களே  அரைகுறைகள்! அதற்காக சமுதாயமும் அரைகுறையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எப்படி மன்னிப்பது?

இதுவரை ம.இ.கா. மருத்துவக் கல்லூரி அத்தோடு பிற மேற்கல்வி நிலையங்கள்-இவைகள்அனைத்தும் இன்றைய நிலையில் யாருடைய பெயரில் இருக்கிறது என்பது மூடுமந்திரமாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது. இவர்கள் என்ன சொன்னாலும் நாம் இவர்களை நம்பப் போவதுமில்லை! அவர்களும் நம்மை ஏமாற்றாமல் இருக்கப் போவதுமில்லை! இது தான் நமக்கு அவர்கள் மீது உள்ள உறுதியான நம்பிக்கை!

இப்போது,  இவர்கள் கண் முன்னே,  மலாக்காவில் இவர்களுடைய ஆட்சி தான் நடக்கிறது. தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளராக ஒரு தமிழர் நியமிக்கப்படவில்லை! அதனையும் பிற இனத்தவரிடம் ஒப்படைத்து விட்டார்கள்! அதனைக் கேட்க இவர்களுக்குத் திராணியில்லை! நிசசயமாக பக்காத்தான் ஆட்சியில் இது நடக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர்களை இவர்கள் குறை சொல்லுகிறார்கள்!

ம.இ.கா. திருந்திவிட்டதற்கான அறிகுறி எதுவுமே இல்லை!  திருந்தவும் மாட்டார்கள்!

No comments:

Post a Comment