முந்தைய பக்காத்தான் அரசாங்கத்தால் கொண்டு வந்த மேம்பாட்டுத் திட்டங்களில் கை வைக்காதீர் என்று இன்றைய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகின்ற நிலைமையில் நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இங்கு ஒரு கேள்வி எழத்தான் செய்யும். பாரிசான் அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களில் பல வேண்டாமென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன அல்லது முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால் பக்காத்தான் அரசாங்கத்தையும் பாரிசான் அரசாங்கத்தையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. நஜிப் அரசாங்கம் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டியது. பக்கத்தான் அரசாங்கம், டாக்டர் மகாதிர் தலைமையில், பல மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கியது. இரண்டு கட்சிகளுமே இரு வேறு துருவங்கள்! வயதான காலத்தில் டாக்டர் மகாதிர் நாட்டின் வளத்தைக் கொள்ளையடிப்பதில் ஈடுபடுவார் என்றால் அதனை யாரும் நம்பத் தயாரில்லை. நாட்டின் மேம்பாட்டில் உண்மையான அக்கறைக் கொண்டிருந்தார் என்பதில் எந்த ஐயமுமில்லை.
அக்கறையோடு குறைந்த நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் இன்றைய அரசாங்கத்தால் தேவையற்றது என்று போகிற போக்கில் தள்ளுபடி செய்வது அரசாங்கத்திற்கு எந்த நல்ல பேரும் கிடைக்கப் போவதில்லை.
ஓரிரு பெரும்பான்மையை மட்டுமே வைத்துக் கொண்டு 'அதை வெட்டு, இதை வெட்டு" என்பது மக்களிடையே எந்த நல்ல பெயரையும் கொண்டு வரப் போவதில்லை!
பெரும்பாலான திட்டங்கள் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மூலமே வரையப்பட்டன என்றாலும் டாக்டர் மகாதிரின் ஒப்புதல் மூலமே அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன என்று உறுதியாக நம்பலாம். நிச்சயமாக அந்த திட்டங்களில் எந்த குறைபாடும் இருக்காது என நம்பலாம்.
ஆனால் இன்றைய நிலைமை வேறு. இது அலிபாபா கூட்டம்! நம்பும்படியாக யாரையும் சுட்டிக்காட்ட முடியாது! ஒன்றை ஒதுக்கிவிட்டு இன்னொன்றை கொண்டு வந்தால் பணம் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள் என்பது தான் பொது மக்களின் எண்ணமாக இருக்கும்!
இருக்கப் போவதோ சில நாள்கள் தான் என்கிற எண்ணம் இருந்தால் இப்போது என்ன செய்கிறீர்களோ அதனையே தொடருங்கள்! இன்னும் சில ஆண்டுகளாவது அரசாங்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தால் முந்தைய அரசாங்கத்தையே பின் பற்றுங்கள்!
வேறு என்ன சொல்ல!
No comments:
Post a Comment