Thursday 20 August 2020

கொஞ்சம் ஒளி தெரிகிறது!

 தேசிய  காவல் படைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் அமீது பாடோர்  இந்திரா காந்தியின் குடும்பத்திற்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியிருக்கிறார்!

அது நம்பிக்கை தரும் செய்தி. கொஞ்சம் ஒளி தெரிகிறது.

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிட்சுவானைக் கண்டுபிடிக்கும் விவகாரத்தில் காவல் படையின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக காவல்துறைத் தலைவர் கூறியிருப்பது கொஞ்சம் நம்பிக்கையைத் தருகிறது.

கடந்த சில வாரங்களாகவே காவல்படைத் தலைவர் இந்த விவகாரத்தில் மூத்த அரசியல்வாதி ஒருவரின்   உதவி நாடப்பட்டிருப்பதாக கூறி வந்திருப்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

பரவாயில்லை, ஏதோ,   எங்கிருந்தோ இது ஆரம்பிக்கப்பட வேண்டும். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் இப்போதாவது  நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்களே அது நமக்குச் சந்தோஷம் தான்.

ஆனால் பல முறை இப்படித்தான் சொல்லுவதும் அப்புறம் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது!

இந்த முறை கொஞ்சம்  வித்தியாசம் தெரிகிறது. காவல்துறைத் தலைவர் மீண்டும் மீண்டும் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டு  வந்திருக்கிறார்.  அவர் பேச்சில் உண்மை தெரிகிறது. கொஞ்சம் நியாயம் தெரிகிறது. பெற்ற  குழந்தையைப் பிரிந்து வாழும் ஒரு தாயின் வேதனை அவருக்கும் தெரிகிறது. நாமும் அவரை நம்ப வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.

நல்லதையே நினைப்போம். இம்முறை அரசியல் தலையீடு எதுவும் இருக்காது என்பதை விட மதவாதிகளின் தலையீடு இருக்காது என நம்புவோம்.

ரிட்சுவான் அடிக்கடி இடம் மாறுகிறார் என்பதெல்லாம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! என்னமோ காவல்துறை சொல்லுவதை நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அது தான் இத்தனை ஆண்டுகளாக - சுமார் பதினோரு ஆண்டுகளாக - இந்த இழுத்தடிப்பு நடந்து வந்திருக்கிறது.

நாம் மேலே சுட்டிக்காட்டியது போல காவல்துறைத் தலைவரின் பேச்சில் இப்போது ஒரு சில மாற்றங்கள் தெரிகின்றன.  அதனாலேயே நாம் நம்ப வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த முறை, காவல்துறை,  திடீர் பல்டி அடிக்காது என்று நம்புகிறோம். மீண்டும் மீண்டும் அந்த பழைய பல்லவியையையே பாடாது என நம்புகின்றோம்.

காவல்துறைத் தலைவரை நாம் நம்புகிறோம். அவரது பேச்சில் மாற்றம் தெரிகிறது. கொஞ்சம் நம்பிக்கை தெரிகிறது.

சீக்கிரம் இந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு தெரியும் என்பதை நாமும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

ஒரு பெற்ற தாயின் கண்ணீர் விரைவில் துடைக்கப்படும் என நம்புவோம்.

ஒளி ஒளிரட்டும்!

No comments:

Post a Comment