கொரோனா தொற்று நோய் இன்று உலகு எங்கிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
வேலையில்லாப் பிரச்சனை என்பது தான் முதலில் கண்களுக்குத் தென்படுகிறது.
பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர், இதில் விமான ஓட்டியான ஓர் இளைஞரும் விதிவிலக்கல்ல. அந்த செய்தியையும் நாம் படித்தோம்.
நம்மில் பலர் செய்கின்ற தவறுகளை கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். வேலை ஒன்று கிடைத்ததும் உடனடியாக நாம் செய்கின்ற வேலை என்ன? முதலில் கார் ஒன்று வாங்குவது அதன் பின்னர் வீடு ஒன்று தேவை. அதையும் வாங்குவது.
வீடு என்பது ஒரு சொத்து, உண்மை தான். ஆனால் அதற்கான, முழுமையான கடன் செலுத்திய பிறகு தான், அது நமது சொத்து. அது வரை அது வங்கியின் சொத்து என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம். கார் என்பது சொத்தே அல்ல! ஒரு இலட்சத்திற்கு வாங்கிய கார் ஒரு வாரம் கழித்து விற்போமானால் அது பாதி விலைக்குத் தான் போகும்! இது தன் நடைமுறை.
கார் வாங்குவது தேவை கருதி தான். அதனைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதில் அதிகப் பணம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த கார் தேவையற்றது. குறைவான தவணை, அது தான் முக்கியம். வீடு வாங்குவதை வீட வாடகை வீடே சிறந்தது.
இங்கு நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது நமது சேமிப்பு. ரொக்கப் பணம். ரொக்கப்பணம் போல வேறு எதுவும் நமக்கு உதவாது! யார் உதவா விட்டாலும் ஆபத்துக் காலத்தில் ரொக்கப்பணம் நமக்கு உதவும்.
இப்போதெல்லாம் நமது சம்பளத்தை மாதத் தவணைகள் கட்டுவதிலேயே செலவழித்து விடுகிறோம்!
அதற்குத் தான் எவ்வளவு நாம் சேமிக்க வேண்டும் என்பதற்கான வழி காட்டுதல்கள் நிறையவே இருக்கின்றன. நமது மாத வருமானத்தில் 20% விழுக்காடு முதலில் நமது சேமிப்புக்குப் போக வேண்டும். அதன் பின்னர் தான் மற்ற செலவுகள், மாதத் தவணைகள் அனைத்தும். என்ன தான் பற்றாக்குறை இருந்தாலும் 20 விழுக்காடு தொடர்ந்து நமது சேமிப்புக்குப் போக வேண்டும்.
அது தான் சுய கட்டுப்பாடு. என்பது. சேமிப்பில் பணம் இல்லையென்றால் நாம் பிறரைத் தான் நம்ப வேண்டும்~ ஆனால் நமது பணம் போல் ஆகுமா!
நண்பர்களே! பணம் இல்லையென்பதற்காக தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். வாழ்க்கை என்பதே போராட்டம் தான். கடைசி வரை போராட வேண்டுமே தவிர நம்பிக்கை இழந்து கைவிட்டுவிடக் கூடாது! நமக்கு வேண்டாதவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்! அவர்களுக்காக நாம் மனம் ஒடிந்து விடக் கூடாது. நமது பாதையைச் சரி செய்து கொண்டு நமது வழியே போக வேண்டியது தான்! இன்று உங்களைப் பார்த்துச் சிரிப்பவர்கள் நாளை உங்களைப் பார்த்து வாழ்த்துவார்கள்! இது தான் உலகம்!
எந்நேரத்திலும், எந்த நிலையிலும் தவறான முடிவுகளை மட்டும் எடுக்காதீர்கள்!
வாழ்ந்து காட்ட வேண்டும்! பிறருக்கு வழியாக இருக்க வேண்டும்!
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment