Thursday 13 August 2020

இருக்கும் இடம் தெரியவில்லை!

 

 "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே"  என்கிற கவியரசு கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது!

முகமது ரிட்சுவான் அப்துல்லா, இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்,  இருக்கும் இடம் தெரியவில்லை என்று கைவிரித்து விட்டது உள்துறை அமைச்சு! சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தியின் கைக் குழந்தை பிரசன்னாவோடு ஓடிப் போனவர் போனவர் தான்!

அவர் இப்போது நாடு நாடாய், வீடு வீடாய் அலைந்து கொண்டிருப்பதால் அவரைக் கண்டுப் பிடிக்க முடியவில்லையாம்! அதிகாரிகளையே அதிர வைக்கிறாராம்!

கொள்ளைக்கார கோடிசுவரர் ஜோ லோ எங்கோ ஒரு நாட்டில் இருப்பது நமது காவல் துறைக்குத் தெரிகிறது! அவரை எங்கள் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளத் தெரிகிறது!

ஆனால், காவல் துறையைப் பொறுத்தவரை இந்த ரிட்சுவான், ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால், "சும்மா ஜுஜுபி!" என்று சொல்லலாம்!

ஆனாலும் இந்த ஜுஜுபி யைக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்கிறது உள்துறை அமைச்சு! எங்கே போய் முட்டிக் கொள்ள?

என்றாலும் அவர்கள் சொல்லுவதை நம்புவோம். நம்பித்தானே ஆக வேண்டும்? இது வரையில் அவர்கள் பொய் என்று எதனையும் சொன்னதில்லையே! 

ஆள் கடத்தல் என்பது நமது நாட்டில் சாதாரண விஷயமாகி விட்டது. இது ஒரு தொடர் கதை என்பதும் நமக்குப் புரிகிறது.

இங்கு நடந்தது என்னவோ குழந்தை கடத்தல். அதுவும் அம்மாவுக்குத் தெரியாமல் அப்பா கடத்திக் கொண்டு போனார்.  அது சரி என்று அவர் நினைத்தால்  அதனைச் சரிகட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும்.

ஆனால் யார் பின்னாலோ ஒளிந்து கொண்டு நீதிமன்றத்தை அவமானப் படுத்துவது படித்தவர் செய்கின்ற வேலை அல்ல!

பயம் தான் மரணம்! துணிவு தான் வாழ்க்கை! என்கிறார் ஐயா சுகி சிவம். இப்படி பயந்து பயந்து வாழ்வது என்ன வாழ்க்கை? ஆண் பிள்ளை,  ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

உண்மையை எதிர்கொள்ள வேண்டும். பயந்து பயந்து ஓடி ஒளிவதை விட பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும்.

இதைப் போன்ற சப்பைக்கட்டு யெல்லாம் பார்த்தாகி விட்டது. இப்படி நாடு நாடாய் வீடு வீடாய் ஒளிந்து கொண்டு இருந்தால் குழந்தை பிரசன்னாவும் ஒளிந்து ஒளிந்து தான் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாய் போய் கொண்டிருக்கிறாரா?

பாவம்! அப்பனுக்குத் தான் தலைவிதி என்றால் குழந்தைக்கு என்ன தலைவிதி?

இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும். காதிலே பூ சுற்றுகின்ற வேலையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

இன்னும் இன்னும் "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.....!" போய்க் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்>

No comments:

Post a Comment