Sunday 16 August 2020

படு பயங்கரமா?

 கோவிட் - 19 அல்லது கொரோனா = எப்படி சொன்னாலும் அதன் வீரியம் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது! குறைந்த பாடில்லை!

குறையவும் நாம் வாய்ப்புக் கொடுப்பதில்லை!  சமூக இடைவெளி என்பதை யெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு விட்டோம்!

ஆமாம்! இந்த இடைஞ்சலை எத்தனை நாளைக்குத் தான் மடியில் கட்டிக் கொண்டு அழுவது? என்று நினைக்கிறோம்!  நம் எல்லாருக்குமே அந்த நிலை தான், என்ன செய்வது?

ஆனால் இந்தத் தொற்று ஒழிக்கப்படுவது அவசியம்! அவசியம்!  இதனால் நாம் மட்டுமா அவதிப்படுகிறோம்? நமது குழந்தைகள் பள்ளிக்கூடம் போகிறார்களே, அவர்களுக்கும் பிரச்சனை தான்! அது மட்டுமா?  மழலையர் பள்ளிக்குப் போகும் மூன்று, நான்கு வயது குழந்தைகள் கூட முகக்கவசம் அணிகிறார்களே, மனம் வலிக்கிறது. அவர்களால் அதனைத் தொடர்ந்து செயல்படுத்த முடியுமா? என்கிற கேள்வியும் எழுகிறது!

ஆனால் குழந்தைகளைவிட பெரியவர்கள் தான் எதனையும் பொருட்படுத்தாதவர்களாக இருக்கிறார்கள்!  கடைகளுக்குப் போனால் முண்டியடித்துக் கொண்டு பொருள்களை வாங்குகிறார்கள்! இப்போதுள்ள இளசுகள் எல்லாம் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்!  வயதானவர்களை பொருள்கள் வாங்க அனுப்பிவிடுகிறார்கள்! அது மட்டும் என்ன, ஆபத்து இல்லாமலா போகும்? அவர்கள் மூலமும் தொற்று தொற்றிக் கொள்ளலாம் அல்லவா!

கொரோனா ஆபத்தானது என்று மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நாட்பட  நாட்பட கொரோனா வலுவடைந்து,  வீரியமிக்கதாக உலா வருகிறது என்பது தான் சுகாதார அமைச்சு அச்சத்தோடு அறிவித்துக் கொண்டிருக்கிறது!

அதிலும் சிவகங்கை தொற்று இன்னும் ஆபத்தானது, படுபயங்கரமானது என்பதாக அமைச்சு கூறுகிறது!

 நாம் தொடர்ந்து சுகாதாரத்தைப் பேணுவோம். வழக்கம் போல முகக்கவசம் அணிவது,  கைகளைச் சுத்தப்படுத்துவது, கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது,  சமுக இடைவேளியைக் கடைப்பிடிப்பது - இப்படி அமைச்சு கூறுகின்ற அனைத்தையும் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பின்பற்றுவது எல்லாமே நமது பாதுகாப்புக்காக மட்டும்தான்! வேறு எக்காரணத்துக்காகவும் அல்ல என்பதை நாம் முதலில் உணர்வோம்!

இந்த படுபயங்கரத்திலிருந்து விடுபட நாமும் படுபயங்கரமாக அமைச்சோடு கைகோர்க்க வேண்டும்! படுத்து விட்டால் என்ன ஆகும்?

படுத்து விட்டால் ....? நெடுமரம்!  சேர்த்தா விறகுக்குக் கூட ஆகாது!

No comments:

Post a Comment