Friday 21 August 2020

ஒற்றுமை குறைகிறதா?

 நாட்டில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்கு யார் காரனம்?

அதாவது இனங்களுக்கிடையே ஒற்றுமை குலைவதற்குக் காரணம் தாய் மொழிப் பள்ளிகள் தான் என்பதாக ஒரு சில அரசியல்வாதிகள் தேர்தல் வருகின்ற காலங்களிலெல்லாம் கூறி வருகின்றனர்.

ஆனால் பொது மக்கள் என்ன கூறுகிறார்கள்? தேர்தல் காலங்களில் எந்த விஷயம் முக்கியமாகப் பேசப்படுகிறது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தேர்தல் காலங்களில்: அரசியல்வாதிகளுக்கு இவைகள் தான் முக்கிய இலக்கு:  1)  தாய் மொழிப்பள்ளிகள்  2)  சமயம் ஒழிந்துவிடும் 3) தேசிய மொழி தனது முக்கியத்துவத்தை இழந்துவிடும் 4) மலாய் மக்கள் பின் தங்கிவிடுவர் 5) சீனர்கள் பணக்காரர்கள் 6) மலாய் மக்கள் தொழிலில் முன்னேறமுடியாது!

பொதுவாக இப்படித்தான் அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் இருக்கும்!

தாய் மொழிப்பள்ளிகள் என்பது இந்நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் இந்த இருநூறு ஆண்டுகளாக ஒற்றுமை இல்லாமல் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அதாவது அடிதடி சண்டையோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? 

அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லையே!

தாய் மொழிப்பள்ளிகள் ஒற்றுமையைக் குலைக்கின்றன என்று சொல்லுபவர்கள் எந்தத் தாய்மொழி பள்ளியில் படித்தார்கள்?  

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய தேசியப் பள்ளிகள் தான் ஒற்றுமையைக் குலைக்கின்றன என்பது சீன, இந்திய பெற்றோர்களுக்குத் தெரிகிறது. தேசியப் பள்ளிகள் சமயப் பள்ளிகளாக மாறி வருகின்றன என்பது தான் குற்றச்சாட்டு.  இது நாள் வரை அது பற்றி எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை! 

தாய் மொழிப்பள்ளிகள் என்பது ஆறு ஆண்டுகள் மட்டும் தான். அதன் பின்னர் மாணவர்கள் பல ஆண்டுகள் தேசிய மொழிப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று தொடர்கிறது கல்வி. 

மேற்கல்வி பயிலும் போது மாணவர்களின் ஒற்றுமையைக் குலைப்பவர் யார்? சீன, இந்திய மாணவர்கள் பேச முடியாதவாறு வாயை அடைப்பவர் யார்? முதல் ஆறு ஆண்டுகள் மாணவர்களுக்கு இன வேற்றுமை புகட்டப்படுவதில்லை. அதன் பின்னர் தான் இன வேற்றுமை புகுத்தப்படுகின்றது. 

இந்த நிலையில் தாய் மொழிப்பள்ளிகள் தான் மலேசியர்களிடையே  ஒற்றுமைக் குறைவுக்குக் காரணம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ளுவது? ஜாகிர் நாயக், பெர்லிஸ் முப்தி, ஸம்ரி வினோத், முகமது ரிட்சுவான் அப்துல்லா போன்றவர்கள் இன ஒற்றுமையை வளர்ப்பவர்களா?

தாய் மொழிப்பள்ளியில் பயின்றவர்கள் யாரேனும் இன ஒற்றுமையைக் குலைத்தவர்கள் என்று இது நாள் வரை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார்களா?

என்னைக் கேட்டால் மலேசியரிடையே ஒற்றுமையில்  குறைகள் இல்லை.  எல்லாம் வழக்கம் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் அட்டூழியங்களைத் தவிர வேறு குறைகள் ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது/

ஒற்றுமை நம்மிடையே வலிமையாகத்தான் இருக்கிறது!

No comments:

Post a Comment